Wednesday, May 31, 2006

அழகு

எல்லா அழகும்
மலர்களாய் - அந்த
மலர்கள் எல்லாம்
மழலைகளாய்

கொத்தோடு அழகாய் சில
கூந்தலோடு அழகாய் சில

கனியோடு அழகாய் சில
பனியோடு அழகாய் சில

வண்டோடு அழகாய் சில
தண்டோடு அழாய் சில

நதிச்சோலையில் அழகாய் சில
அதிகாலையில் அழகாய் சில

அர்ச்சனையில் அழகாய் சில
அந்தியில் அழகாய் சில

அல்லி அதிகமாக அழகாய் சில
புல்லி இல்லாமல் அழகாய் சில

செடியோடு அழகாய் சில
நெடியோடு அழகாய் சில

ஒவ்வொன்றும் அழகுதான்
ஆனாலும்
ஒற்றுமைப்பட மறுக்கும்
அழகோடு.

-பி.எம்.நாகராஜன்

நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமலொம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்.- 1

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவமெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்.- 2

இன்னிசை மாத ரிசையுளேன் நான்,
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.- 3

மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்தளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்,- 4

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டபல சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்,- 5

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்,
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்.- 7

-பாரதியார்

Monday, May 29, 2006

அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறவிலிகாள்!- பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?- 1

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயக்கும் மதியிலிகாள்!_ எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?- 2

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?- 3

வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.- 4

நாமம்பல் கோடியார் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே_ ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே- 5

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே_ உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.- 6

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்_ நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?- 7

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே_ இங்கு,
கொள்ளக் கரிய பரிமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்து _பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்_ என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

-பாரதியார்

Saturday, May 27, 2006

மனதில் உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிரே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவமண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்.

-பாரதியார்

அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

அச்சிமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

அச்சிமில்லை அச்சமில்லை அச்சமெனப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கச்கணிந்த கொங்கை மாதர் கணகள் வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நணப ரூட்டு போதனும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சை நுனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

-பாரதியார்

Friday, May 26, 2006

கானல்

வானும் கனல் சொரியும்!- தரை
மண்ணும் கனல் எழுப்பும்!
கானலில் நான் நடந்தேன்- நிழல்
கணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர்- நிழல்
உயிருக் கில்லை அங்கே!
ஆன திசைமுழுதும்- தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா- தெடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால்- அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்!- ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல், செந்தணலில்- கட்டிக்
கந்தக மாய்எரியும்!

முளைத்த கள்ளியினைக்- கனல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய்- இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும்கானல்!- உயிர்
கொன்று தின்னும்கானல்!
களைத்த மேனிகண்டும்- புறங்
கழுத்த றுக்கும்வெளி!

திடுக்கென விழித்தேன்- நல்ல
சீதளப் பூஞ்சோலை!
நெடும் பகற்கனவில்- கண்ட
நெஞ்சுறுத் தும்கானல்
தொடர்ந்த தென்நினைவில்!- குளிர்
சோலையும் ஓடையுமே
சுடவ ரும்கனலோ- என்று
தோன்றிய துண்மையிலே.

-பாரதிதாசன்

Thursday, May 25, 2006

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! (எங்கள்)

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! (எங்கள்)

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூ தூது சங்கே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! (எங்கள்)

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரியைப்போல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
செங்குறுதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! (எங்கள்)

-பாரதிதாசன்

Tuesday, May 23, 2006

உன்னை விலக அல்ல

பிச்சிப் பூவே!
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
முத்தங்களால் உன்னை
எச்சில்படுத்திப் போகும்
காற்றை முகர்ந்துபார்
என் மூச்சின்
வாசனைதான் வீசும்

நான்
உன் வீட்டு முற்றம் தான்
சின்னச் சின்ன கோலங்களால்
என்னைச் சிங்காரிக்காவிடிலும்
பள்ளங்கள் தோண்டி - என்
உள்ளத்தைப் புண்ணாக்காமல்
இருந்திருக்கலாமே!

எரிவாயுவினால் என்னை நீ
எரித்துக் கொன்றாலும்
கடுகடுவென என்னை நீ
கரித்துக் கொட்டினாலும்
உன்னை விலக அல்ல
உலகை விலகவே
விரும்புகிறேன்.

-பி.எம்.நாகராஜன்

நான் மலர்வேன்

நீ
தொலைவில் வரும்போது
நான்
பக்கப்பார்வை அற்றவன்.

என்னை
தொட்டுக் கொண்டிருக்கும்போது
எப்போதும்
தூரப்பார்வை அற்றவன்

அருகே இருந்தால்
அமிர்தமும் தெவிட்டுமாம்
தென்றலே! - நீ மட்டும்
தெவிட்டாமல் இருப்பது
எப்படி?

அந்த ஆதவனால்
ஆயிரம் பூக்கள்
மலரலாம்.

உன்னால் மட்டுமே
நான் மலர்வேன்.

- பி.எம்.நாகராஜன்

தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதாழல்- மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலர் சிலிர்ப்பால்- கருங்
கண்மலரால் முல்லை வெணணகைப்பால்
அமையும் அன்னங்களின் மென்னடையால்- மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி- அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே- நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள்- என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம்- நல்ல
தோகையர் கூட்ட மெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே- வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!

-பாரதிதாசன்

Monday, May 22, 2006

இணையம் உலகை இணைக்கும்

இணையம்;
கனவா, வியப்புதிர்த்திடும் புதிரா?
இல்லை இல்லை, ஆறறிவு விலங்கினத்தின்
அற்புத படைப்பு.

அனல் பறக்கும் கோடையிலும்
குளு குளு அறையில் - ஜில்லென்றிருக்கும்
கால தேவனின் அற்புத குழந்தை.

பன்னீரில் பழரசத்தில் - தவழ்வாரும்
கண்ணீரில் வேர்வையூற்றில் - மிதப்பாரும்
அன்புடன் விரும்பும் குழந்தை.

கிளைகள் யாவும் மாநிலமாய் - அதன்
விழுது யாவும் நாடுகளாய் - வளர்ந்தது
நம் இணையம்.

விளையாட்டா?
பொருளீட்டி பல்வகையில் - செலவிடும்
தவணை முறை வாணிகமா?
கை தேர்ந்த மருத்துவமா?
அல்லது
அது ஓர் சுவை மிக்க இலக்கியமா?
அத்தனையும் வளம் பெறும்
சிறப்பான இணையத்தால்...

பாரதியையும் ஷெல்லியையும் - இணைக்கும்
இன்ப ரதம் அது - தமிழ் வள்ளுவனை
தரணியெல்லாம் உலவ செய்யும்
இந்திய காந்தீயத்தை - இங்கிலாந்தில்
பேசச் செய்யும்.

காதல் எனும் காவியத்தை - கடல் கடந்து
ஏற்படுத்தும் - காதல் சின்னமாய் - தாஜ்மஹாலை
கனடாவிலும் ரசிக்க செய்யும்.

ஏழு கடலுக்கு அப்பாலும் - எளிதாக
பொருள் சேர்க்க செய்யும்.
இமையச்சாரலில் ஒருவன் - எண்ணம்
ஆல்ப்ஸ் சாரலிலும் எதிரொலிக்கும்.

பிற நாட்டு கலைகளை அறிந்திட செய்யும்
புத்தம் புது கலைகள் - நித்தம்
வளர்ந்திடும் எங்கும்.

நிறமும் மொழியும் தடை - உலகில்
கடல் என்பது பிரிக்கும் படையென்ற - பழமைக்கு
கல்லறையமைத்த இணையம்.

உடையில் மாற்றம் - உண்ணும்
உணவில் மாற்றம் - வாழ்க்கை
நடையினால் மாற்றம் - வாழும்
நாட்டினால் மாற்றம் - எனினும்
மானுட அறிவை - மாட்சியுற
செய்யும் இணையம்.

உதவிகள் புரிய உறு துயர் களைய
உயிரியம் எனும் சமநெறி வளர - உதவும்
இணையம் எதிலும் சிறப்பே.

உலகின் ஆதாரம் சூரினனே - எங்கும்
ஒருசேர தெரிவதில்லை - மனிதன்
படைத்த இணையமோ
உலகின் பாலம் என்றுமே!!!

- ஜஹபர் சாதிக்.M

ஒன்றும் இல்லை

கடலே - உனக்குள்
காணாமல் போன
காவிரியாறு நான்.

என்னையில்லை என்றாலும்
இன்னொருவரை நீ
என்றாவது ஒருநாள்
உண்மையாக நேசிப்பாய்
அப்போதாவது உணர்வாய்
அல்லவா!

உன் சாதாரணங்கள்
எனக்குத் தந்த ரணங்களை.

உன் பிடிவாதங்கள்
எனக்கு தந்த அடிகளை

காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு
ஒன்று தெரிகிறது - நான்
உன் குஞ்சு இல்லை

விலகிக் கொள்கிறேன்
விலகி விடு
விட்டு விடு
உனக்கும் எனக்கும்
ஒன்றும் இல்லை

-பி.எம்.நாகராஜன்

தமிழன்

பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன்- தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்- பிறக்கும் போதே...

இறப்பதே இல்லை தமிழன்- புகழுடம்பை
எங்குமே வைத்தது காண்க

மறக்குமா வையம் தமிழன்- மனப்பாங்கு
வளர்த்த அறத்தையும் அறிவையும்?
சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்- பிறக்கும் போதே...

முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல்மொழி தமிழ் மொழி- ஆதலால்
புதுவாழ் வின்வேர் தமிழர் பண்பாடே- பிறக்கும் போதே...

முதுகிற்புண் படாதவன் தமிழன்- போர்எனில்
மொய்குழல் முத்தமென் றெண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்- பிறக்கும் போதே...

-பாரதிதாசன்

Saturday, May 20, 2006

தமிழ் உணவு

ஆற்றங் கரைதனிலே_ இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றிலுட் கார்ந்திருந்தேன்_ வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர்_ வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார்_சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)

நாட்டின் நிலைபேசிப்_ பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஒர் புறம்
ஒட்டம் பியின்றிடுவார்_ நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச்_ செய்த
குத்துவிளக்சினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே_ மண்ணை
அள்ளுவர், வீழுவர், அம்புலிவேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)

புனலும் நிலாவொனியும்- அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந்- தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்!
தனிஒரு வெள்ளிக்கலம்_ சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்!
போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)

விந்தை உரைத்திடுவேன்_ அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள்_ அது
முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே_ மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்?_ கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன (ஆற்றங்கரையினிலே)

பொருளற்ற பாட்டுக்களை_ அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின்_ திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ_ மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச்சொல்- ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங்கரைதனிலே)

சங்கீத விற்பனனாம்_ ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே_ சுவை
அத்தனையும் கண்டுவிட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே_ நன்று
நன்றென ஆர்ப்பரித்தார், அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில்_ஓர்
இன்பநறுங்கவி கேட்டது காதினில் (ஆற்றங்கரைதனிலே)

அஞ்சலை உன் ஆசை_ என்னை
அப்புறம் இப்புறம் போகவிடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய்_ நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!_ என்ற
வண்ணத் தமிழ்ப்பாதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும் வானத்தையும்- குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும் (ஆற்றங்கரைதனிலே)

ஒன்றெனச் செய்ததுவே!_ நல்
உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்!
நன்று தமிழ் வாளர்க_ தமிழ்
நாட்டினிலே எங்கணும் பல்குக! பல்குக!

என்றும் தமிழ் வளர்க_ கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல்_ தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! (ஆற்றங்கரைதனிலே)

-பாரதிதாசன்

Friday, May 19, 2006

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும்- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்.
பனி மலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும்- தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்_ தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும்- ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியம்,
குழலிடை வாய்க்கும் இசையும்- வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும்_ பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும் தமிழும்_ நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்.!

பயிலுறும் அண்ணன் தம்பி_ அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை,_ என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள்_அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம்_ தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்

நீலச் சுடர்மணி வானம்_ ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம்_ ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும்_ நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர்,_ தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும்_ பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை_கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு_ கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!, உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

-பாரதிதாசன்

Thursday, May 18, 2006

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்!_ அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள்உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்றுபேர்!_ இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்!_ இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதவென்று பேர்!- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!_ இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!- இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்_ இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

--பாரதிதாசன்

Tuesday, May 16, 2006

முத்து மாமா

புதுக்கோயில் மதில்மேலே முத்து மாமா- இரண்டு
புறாவந்து பாடுவதேன் முத்து மாமா?
எதுக்காகப் பாடினவோ முத்து மாமா- நாமும்
அதுக்காகப் பாடுவமே முத்து மாமா.
ஒதுக்கிடுமா ஆற்று நீரைக் கடல் வெள்ளம்-என்னை
ஒதிக்கிவைக்க எண்ணலாமா முத்து மாமா?

முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா?
ஓதிய மரத்தின் கீழே முத்து மாமா- கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்து மாமா?
எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா.
குதி குதியாய்க் குதித்துண்டு முத்து மாமா- எனக்குக்
குழந்தையில்லை ஆனாலும் முத்து மாமா
எதிலும் எனக்கதிகாரம் முத்து மாமா- நீதான்
எப்போதுமே என் சொத்து முத்து மாமா!

-பாரதிதாசன்

Monday, May 15, 2006

நீ எனக்கு வேண்டும்

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்குப் புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும்- என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்!

மீனுக்கு பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப்பபுலி வேண்டும்- என்
கண்ணாட்டியே நீ எனக்கும் வேண்டும்!

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்கு தேன் வேண்டும்
தோளுக்குப் பூமாலை வேண்டும்-அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்!

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும்
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!

-பாரதிதாசன்

Saturday, May 13, 2006

சாவை நீக்கு

கண்டவுடன் காதல் கொண்டேன் உன்மேலே- நீ
கண்வைக்க வேணுமடி என்மேலே
அண்டினேன் ஆதரிக்கக் கையோடு- கேள்
அதுதானே தமிழர்கள் பண்பாடு!

கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே- எனைக்
கூட்டிக்கொள் உன் இடுப்பின் ஓரமே
நொண்டியின் கைம்மேல் வந்தா விழும்?- என்
நோய் தீர்க்கும் சேலத்து மாம்பழம்!

அழகில் ஆருமில்லை உன்னைப் போல் -உன்மேல்
அன்பு கொண்டவன் ஆருமில்லை என்னைப்போல்

இழைக்க இழைக்க மணம் கொடுக்கும் சந்தனம்- மனம்
இனிக்க இனிக்கப் பூப்பூக்கும் நந்தவனம்!
பழுக்க பழுக்க சுவை கொடுக்கும் செவ்வாழை
பறிக்கும் போதே மணம் கொடுக்கும் வெண்தாழை
தழுவு முன்னே இன்பந்தரும் பெண்ணாளே- என்
சாவை நீக்க வேண்டுமடி கண்ணாளே!

-பாரதிதாசன்

Friday, May 12, 2006

அனைத்துமானாய் கண்ணா

கீதையாய் நீ வந்து
பாதையானாய் கண்ணா
விதையாய் நின்று - நீயே
சதையானாய் கண்ணா

சொல்லாய் நீ வந்து
கவியானாய் கண்ணா
எல்லாமாய் நின்று - நீயே
புவியானாய் கண்ணா

பனியாய் நீ வந்து
குளிரானாய் கண்ணா
வெண்ணையாய் நின்று - நீயே
வெளிரானாய் கண்ணா

மலராய் நீ வந்து
மணமானாய் கண்ணா
மனமாய் நின்று - நீயே
குணமானாய் கண்ணா

தென்றலாய் நீ வந்து
தொட்டாய் கண்ணா
தீயாக நின்று - என்னை
சுட்டாய் கண்ணா

தூரலாக நீ வந்து
ஈரமாக்கினாய் கண்ணா
தூரமாக நின்று - என்னை
பாரமாக்கினாய் கண்ணா

இடியாக நீ வந்து
தூற்றினாய் கண்ணா
படியாக நின்று - என்னை
ஏற்றினாய் கண்ணா

இரவாக நீ வந்து
தூங்கவைத்தாய் கண்ணா
கனவாக நின்று - என்னை
ஏங்க வைத்தாய் கண்ணா

கரும்பாக நீ வந்து
இனிமையாக்கினாய் கண்ணா
காதலாக நின்று - என்னை
தனிமையாக்கினாய் கண்ணா

கதிராய் நீ வந்து
ஒளிசேர்த்தாய் கண்ணா
கலங்கரையாய் நின்று - என்னை
வழிசேர்த்தாய் கண்ணா

இசையாக நீ வந்து
மயக்கினாய் கண்ணா
இதயமாக நின்று - என்னை
இயக்கினாய் கண்ணா

நிலவாக நீ வந்து
சிரித்தாய் கண்ணா
நினைவாக நின்று - என்னை
எரித்தாய் கண்ணா

கோபமாக நீ வந்து
கொதித்தாய் கண்ணா
சாபமாக நின்று - என்னை
மிதித்தாய் கண்ணா

சோகமாக நீ வந்து
இடித்தாய் கண்ணா
தாகமாக நின்று - என்னை
குடித்தாய் கண்ணா

அம்மாவாய் நீ வந்து
அன்பானாய் கண்ணா - என்
ஆருயிராய் நீ வந்து - எனக்கு
அனைத்துமானாய் கண்ணா

-பி.எம்.நாகராஜன்

தனிமை

எத்தனைபேர்
எனைச்சுற்றி இருந்தாலும்
எனக்குள் நான்
தனியாகத்தான் இருப்பேன்
என்னருகில்
நீ இல்லாதிருந்தால்.

-பி.எம்.நாகராஜன்

காதல்

பெண்மை இலாதவர்க்கு காதல்
ஒருபோதும் வராது
ஏனெனில் காதல் ஈரமானது.

ஆண்மை இலாதவர்க்கு காதல்
ஒத்தும் வராது
ஏனெனில் காதல் வீரமானது

உண்மை இலாதவர்க்கு காதல்
உரிமையும் ஆகாது
ஏனெனில் காதல் வெண்மையானது

-பி.எம்.நாகராஜன்

நினைவிருக்கட்டும்...

தென்றலும் புயலாய் மாறிடலாம் - அந்த
நதியும் உலகை அழித்திடலாம் - ஒரு
சுடரும் உயிர்களை மாய்த்திடலாம் - ஒரு நாள்
நீயும் என்னை விரும்பிடலாம் - அன்பே
மாற்றம் என்பது உடலுக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்குந்தான்!

- ஜஹபர் சாதிக்.M

என்னவளே!

முட்களாய் இருந்த என்னை
மலராய் மாற்றியவள்
கவிதையெனும் காவியத்தை
கடைவிழியில் கற்பித்தவள்
வாழ்க்கையெனும் பாதையை - வெறும்
வார்த்தைகளால் விளக்கியவள்
அன்பென்னும் தோட்டத்தில்
அரசனாக்கியவள் - அவள்
முயற்சிகளின் தோல்வியை
முன்னேற்றமாக்கியவள்
புரியாத புதிர்களை - வெறும்
புன்னகையிலிட்டவள்
பொறுமையெனும் பெரும் குணத்தை
பொக்கிசமாய் தந்தவள்
வெற்றியெனும் சாதனையை
வெல்லமாய் அளித்திட்டவள்.

- ஜஹபர் சாதிக்.M

Thursday, May 11, 2006

உன் எண்ணம் கூறு

பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி- அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி

உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!

ஏழைக்கு வடித்து வைத்த சோறு- பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு

பெருக் கெடுத்த தேனாறு
பெண்ணே உன் எண்ணம் கூறு!

காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா- நீ
கடுகடுப்புக் காட்டவதும் என் மட்டிலா

வேரிலே பழுத்த பலா
வேண்டும் போதும் தடங்கலா?

வீணாகிப் போகலாமா நேரமே- என்னை
விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே

பொறுத்தேன் ஒரு வாரமே
பொறுக்க மாட்டார் யாருமே!

-பாரதிதாசன்

Wednesday, May 10, 2006

நீ இருந்தால்

இதயம் சுமக்கும்
இமயம் ஒவ்வொன்றும்
கங்கோத்திரியாய்
பொங்கிப் பாய்கிறது
நிலவே! என்னருகில்
நீ இருந்தால்.

- பி.எம்.நாகராஜன்

தோழியே சொல்வாய்

காசுபணம் வேண்டாமடி தோழியே- அவன்
கட்டழகு போதுமடி தோழியே
அசை வைத்தேன் அவன் மேலே தோழியே- என்னை
அவனுக்கே அளித்தேனடி தோழியே!

ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே- என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே- நான்
இவ்வுலகுக் கஞ்சேனடி தோழியே!

தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில்- செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர்- நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே!

ஒன்றெனக்குச் செய்திடடி இப்போதே- நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன்- கொஞ்சம்
அன்புதந்து போகச் சொல்வாய் தோழயே!

என்பார்வை அவன் பார்வை தோழியே- அங்கே
இடித்ததுவும் மின்னியதும் சொல்வாயே
தன்அழகின் தாக்கடைந்த என் வாழவில்- அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே!

பொன்னான நாளடியே என் தோழி- ஒருவாய்ப்
பொங்கலுண்டு போகும்படி சொல்வாயே
இந்தாளும் வாழுகின்றேன் தோழியே- அவன்
எனை மறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே!

--பாரதிதாசன்

Tuesday, May 09, 2006

பார் பேசு

நண்பா என்னை பார்க்கக்கூடாது
என்று கூறவில்லை
தப்பான பார்வையில் பார்க்காதே

நண்பா என்னுடன் பேசவேண்டாம்
என்று கூறவில்லை
தப்பான வார்த்தைகளில் பேசாதே


நான் கவிதை எழுதுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன் உள்ளத்தையும் வருணிக்க

நான் வாழுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன்னுடன் வாழவும் கூட

- புன்னகைமன்னன்

கன்னியாகுமரி(பெண்)

பெண்ணின் கருங்கூந்தல் போல்
கரிய நிற மேகங்கள்
அவள் பார்வையில் இருந்து வரும் ஒளி போல்
வானவில் ஒளிகதிர்கள்
அவள் சிரிப்பொலி போல்
சிலு சிலுவெனெ பொழியும் மழை
அவள் செவ்விதழ் போல்
மாலையில் காணும் செவ்வானம்
அவள் இடை போல்
வளைந்து நெளிந்த மலை பகுதிகள்
அவள் முக பொலிவு போல்
எங்கும் காணும் இயற்க்கை வனப்புகள்
இது அத்தனையும் ஒருங்கபெற்றது
கன்னியாகுமரி(பெண்) மாவட்டம்

-புன்னகைமன்னன்

நான் என்னை வெறுத்து விட்டேன்

நீ என்னை பார்ததால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னுடன் பேசியதால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னுடன் பழகியதால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னை விரும்பிய போதுக்கூட
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னிடம் இல்லை என்று கூறும் போதும்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னை மறந்துவிடு என்றதும்
நான் என்னை தானாக வெறுத்து விட்டேன்

-புன்னகைமன்னன்

குட்டி நிலாவும் வட்ட நிலாவும்

வட்ட நிலா:

குட்டி நிலாவே குட்டி நிலாவே
எங்கே வந்தாய் குட்டி நிலாவே?

குட்டி நிலா:

வட்ட நிலாவே வட்டநிலாவே
வந்தேன் உன்னிடம் வட்ட நிலாவே
கெட்ட உலகம் வாழும் வழியைக்
கேட்க வந்தேன் வட்ட நிலாவே

வட்ட நிலா:

எட்ட இருக்கும் வட்ட நிலா நான்
எனக்கா தெரிய குட்டி நிலாவே?

குட்டி நிலா:

வளர்ச்சி பெற்றாய் குளிர்ச்சி பெற்றாய்
வட்ட நிலாவே வாய் திறவாயோ?

வட்ட நிலா:

தளர்ச்சி பெற்றது தட்டை யுலகம்
சண்டை பிடித்தது குட்டி நிலவே.

குட்டி நிலா:

களைப்பு நீங்க உலகம் ஒருவன்
கைக்குள் வருமோ வட்ட நிலாவே?

வட்ட நிலா:

இருப்பு மிகவும் இருக்கும் ஊரில்
அரிசி உண்டோ குட்டி நிலாவே.

குட்டி நிலா:

ஆயிரங் கோடிச் செலவில் வந்தேன்
அறிவைக் கொடுப்பாய் வட்ட நிலாவே

வட்ட நிலா:

ஆயிரங் கோடியை அரிசிக்காக
அளித்ததுண்டா குட்டி நிலாவே
போய்விடு போய்விடு குட்டி நிலாவே!
போய்விடு -என்றது வட்ட நிலாவே
தீயில் எரிந்தது குட்டி நிலாவே;
தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே

-பாரதிதாசன்

Friday, May 05, 2006

தென்றல் செய்த குறும்பு

இழுத்திழுத்து மூடுகின்றேன் எடுத்தெடுத்துப் போடுகின்றாய்
பழிக்க என்றன் மேலாடைத் தென்றலே- உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே
சிலிர்க்க சிலிர்க்க வீசுகின்றாய்
செந்தாழை மணம் பூசுகின்றாய்
குலுங்கி நடக்கும் போதிலே என் பாவாடை- தலைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே
வந்து வந்து கன்னந் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்தமிட்டாய்
செந்தாமரை முகத்திளை ஏன் நாடினர்- ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்
மெலுக்குமெல் குளிரைச் செய்தாய்
மிகமிகமிக் களியைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை
வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் என் தென்றலே

-பாரதிதாசன்

Thursday, May 04, 2006

தனித்தனி அல்ல

உன்னை
ஒட்டி ஓட்டி இருந்தாலும்
எதுவும் நீயும்
ஒன்று அல்ல
வேறு வேறுதான்
நாம்
தள்ளித்தள்ளி இருந்தாலும்
தனித்தனி அல்ல
ஒன்றுதான்.

-பி.எம்.நாகராஜன்

மயில்

அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சும் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயிலிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!

உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல்உன் தனிக்கொத்து! ஸபாஷ்! கரகோஷம்!

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
இவைகள் என்னை எடுத்துப் போயின!

இப்போது, என் நினைவு என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்;
நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்!
நிசம்அது! நிசம்! நிசம்! - நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ,
கறையொன் றில்லாக் கலாப மயிலே,
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,
மனதிற் போட்டுவை, மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற்காக!

புவிக்கொன்றுரைப்பேன்; புருஷர் கூட்டம்,
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!

-பாரதிதாசன்

Wednesday, May 03, 2006

காடு

முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்!
முட்டுகருங் கற்களும்நெருங்கும்-மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்தடுங்கும் உள்
நடுங்கும்


கிட்டிமர வேர்கள்பல கூடும்- அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும்- பாடி
மட்டையசை வால்புலியின்
குட்டிகள் போய்த் தாய்புலியைத்
தெடும்- பின்
வாடும்.

நீள் கிளைகள் ஆல்விழுதி னோடு -கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு- கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால் கழற்றிப் பாயவருங்
காடு -பள்ளம்!
மேடு!

கோளாடும் கிளம்பிவரும் பன்றி- நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி- மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி
குன்றில்- புகும்
ஒன்றி

வானிடைஓர் வானடர்ந்து வாறு- பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல
தேனடை சொரிந்ததுவிம்
தென்னை மரம் ஊற்றியதும்
ஆறு- இன்பச்
சாறு!

கானிடைப் பெரும்பறவை நோக்கும்- அது
காலிடையே காலிகளைத் தூக்கும்- மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும்- அடை
ஆக்கும்.

-பாரதிதாசன்

Tuesday, May 02, 2006

எல்லாம் நீயே

ஆல் இலையில்
கால் கடிக்கும் கண்ணா

மண்ணையும் வெண்ணையும்
என்னையும் தின்பவனே கண்ணா

குயிலோசை குழலோசை
உயிரோசை நீயே கண்ணா

எனக்குப் பிடித்த

நீல வண்ணம் நீ
நிலையான காதல் நீ
படிக மாலை நீ
பாரதிப் பாடல்கள் நீ
குறும்புகள் நீ
குழந்தைத்தனம் நீ
அலைகடல் நீ
ஆனந்த தாண்டவம் நீ

எனக்குப் பிடித்த

வெள்ளைத் தாமரை நீ
வினாயகர் பொம்மை நீ
இளநீர் நீ
இசைத்தொகுப்பு நீ
காட்டு அருவி நீ
சிட்டுக் குருவி நீ
படகு சவாரி நீ
பனிச் சாரல் நீ

எனக்குப் பிடித்த

நகைச்சுவை நீ
நவராத்திரி கொலு நீ
சுவையான உணவு நீ
சிற்பங்கள் நீ
கலாச்சாரம் நீ
கவியரங்கம் நீ
முத்தங்கள் நீ
முழு நிலவு நீ

எனக்குப் பிடித்த

தியாகராசர் ஆராதினை நீ
திருமலை உற்சவம் நீ
வேடிக்கை விழையாட்டு நீ
வேதங்கள் மந்திரங்கள் நீ
ஆங்கில இலக்கியம் நீ
அழகான சோலை நீ
மழைச் சாரல் நீ
மனித நேயம் நீ

என்
திமிர் நீ
தன்னம்பிக்கை நீ
தன்மானம் நீ
உண்மைகள் நீ

என்
அம்மா நீ
குழந்தை நீ
சொந்தம் நீ
உலகம் நீ
எனக்கு
எல்லாம் நீயே
கண்ணா.

-பி.எம்.நாகராஜன்

குழந்தை

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வாழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவையத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மழலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட்டோமோ?
செம்பவழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்று! சிரித்து வானமே!

-பாரதிதாசன்