Friday, May 12, 2006

என்னவளே!

முட்களாய் இருந்த என்னை
மலராய் மாற்றியவள்
கவிதையெனும் காவியத்தை
கடைவிழியில் கற்பித்தவள்
வாழ்க்கையெனும் பாதையை - வெறும்
வார்த்தைகளால் விளக்கியவள்
அன்பென்னும் தோட்டத்தில்
அரசனாக்கியவள் - அவள்
முயற்சிகளின் தோல்வியை
முன்னேற்றமாக்கியவள்
புரியாத புதிர்களை - வெறும்
புன்னகையிலிட்டவள்
பொறுமையெனும் பெரும் குணத்தை
பொக்கிசமாய் தந்தவள்
வெற்றியெனும் சாதனையை
வெல்லமாய் அளித்திட்டவள்.

- ஜஹபர் சாதிக்.M

Thursday, May 11, 2006

உன் எண்ணம் கூறு

பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி- அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி

உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!

ஏழைக்கு வடித்து வைத்த சோறு- பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு

பெருக் கெடுத்த தேனாறு
பெண்ணே உன் எண்ணம் கூறு!

காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா- நீ
கடுகடுப்புக் காட்டவதும் என் மட்டிலா

வேரிலே பழுத்த பலா
வேண்டும் போதும் தடங்கலா?

வீணாகிப் போகலாமா நேரமே- என்னை
விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே

பொறுத்தேன் ஒரு வாரமே
பொறுக்க மாட்டார் யாருமே!

-பாரதிதாசன்

Wednesday, May 10, 2006

நீ இருந்தால்

இதயம் சுமக்கும்
இமயம் ஒவ்வொன்றும்
கங்கோத்திரியாய்
பொங்கிப் பாய்கிறது
நிலவே! என்னருகில்
நீ இருந்தால்.

- பி.எம்.நாகராஜன்

தோழியே சொல்வாய்

காசுபணம் வேண்டாமடி தோழியே- அவன்
கட்டழகு போதுமடி தோழியே
அசை வைத்தேன் அவன் மேலே தோழியே- என்னை
அவனுக்கே அளித்தேனடி தோழியே!

ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே- என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே- நான்
இவ்வுலகுக் கஞ்சேனடி தோழியே!

தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில்- செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர்- நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே!

ஒன்றெனக்குச் செய்திடடி இப்போதே- நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன்- கொஞ்சம்
அன்புதந்து போகச் சொல்வாய் தோழயே!

என்பார்வை அவன் பார்வை தோழியே- அங்கே
இடித்ததுவும் மின்னியதும் சொல்வாயே
தன்அழகின் தாக்கடைந்த என் வாழவில்- அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே!

பொன்னான நாளடியே என் தோழி- ஒருவாய்ப்
பொங்கலுண்டு போகும்படி சொல்வாயே
இந்தாளும் வாழுகின்றேன் தோழியே- அவன்
எனை மறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே!

--பாரதிதாசன்

Tuesday, May 09, 2006

பார் பேசு

நண்பா என்னை பார்க்கக்கூடாது
என்று கூறவில்லை
தப்பான பார்வையில் பார்க்காதே

நண்பா என்னுடன் பேசவேண்டாம்
என்று கூறவில்லை
தப்பான வார்த்தைகளில் பேசாதே


நான் கவிதை எழுதுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன் உள்ளத்தையும் வருணிக்க

நான் வாழுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன்னுடன் வாழவும் கூட

- புன்னகைமன்னன்

கன்னியாகுமரி(பெண்)

பெண்ணின் கருங்கூந்தல் போல்
கரிய நிற மேகங்கள்
அவள் பார்வையில் இருந்து வரும் ஒளி போல்
வானவில் ஒளிகதிர்கள்
அவள் சிரிப்பொலி போல்
சிலு சிலுவெனெ பொழியும் மழை
அவள் செவ்விதழ் போல்
மாலையில் காணும் செவ்வானம்
அவள் இடை போல்
வளைந்து நெளிந்த மலை பகுதிகள்
அவள் முக பொலிவு போல்
எங்கும் காணும் இயற்க்கை வனப்புகள்
இது அத்தனையும் ஒருங்கபெற்றது
கன்னியாகுமரி(பெண்) மாவட்டம்

-புன்னகைமன்னன்

நான் என்னை வெறுத்து விட்டேன்

நீ என்னை பார்ததால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னுடன் பேசியதால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னுடன் பழகியதால்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னை விரும்பிய போதுக்கூட
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னிடம் இல்லை என்று கூறும் போதும்
நான் உன்னை வெறுக்கவில்லை
நீ என்னை மறந்துவிடு என்றதும்
நான் என்னை தானாக வெறுத்து விட்டேன்

-புன்னகைமன்னன்

குட்டி நிலாவும் வட்ட நிலாவும்

வட்ட நிலா:

குட்டி நிலாவே குட்டி நிலாவே
எங்கே வந்தாய் குட்டி நிலாவே?

குட்டி நிலா:

வட்ட நிலாவே வட்டநிலாவே
வந்தேன் உன்னிடம் வட்ட நிலாவே
கெட்ட உலகம் வாழும் வழியைக்
கேட்க வந்தேன் வட்ட நிலாவே

வட்ட நிலா:

எட்ட இருக்கும் வட்ட நிலா நான்
எனக்கா தெரிய குட்டி நிலாவே?

குட்டி நிலா:

வளர்ச்சி பெற்றாய் குளிர்ச்சி பெற்றாய்
வட்ட நிலாவே வாய் திறவாயோ?

வட்ட நிலா:

தளர்ச்சி பெற்றது தட்டை யுலகம்
சண்டை பிடித்தது குட்டி நிலவே.

குட்டி நிலா:

களைப்பு நீங்க உலகம் ஒருவன்
கைக்குள் வருமோ வட்ட நிலாவே?

வட்ட நிலா:

இருப்பு மிகவும் இருக்கும் ஊரில்
அரிசி உண்டோ குட்டி நிலாவே.

குட்டி நிலா:

ஆயிரங் கோடிச் செலவில் வந்தேன்
அறிவைக் கொடுப்பாய் வட்ட நிலாவே

வட்ட நிலா:

ஆயிரங் கோடியை அரிசிக்காக
அளித்ததுண்டா குட்டி நிலாவே
போய்விடு போய்விடு குட்டி நிலாவே!
போய்விடு -என்றது வட்ட நிலாவே
தீயில் எரிந்தது குட்டி நிலாவே;
தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே

-பாரதிதாசன்

Friday, May 05, 2006

தென்றல் செய்த குறும்பு

இழுத்திழுத்து மூடுகின்றேன் எடுத்தெடுத்துப் போடுகின்றாய்
பழிக்க என்றன் மேலாடைத் தென்றலே- உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே
சிலிர்க்க சிலிர்க்க வீசுகின்றாய்
செந்தாழை மணம் பூசுகின்றாய்
குலுங்கி நடக்கும் போதிலே என் பாவாடை- தலைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே
வந்து வந்து கன்னந் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்தமிட்டாய்
செந்தாமரை முகத்திளை ஏன் நாடினர்- ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்
மெலுக்குமெல் குளிரைச் செய்தாய்
மிகமிகமிக் களியைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை
வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் என் தென்றலே

-பாரதிதாசன்

Thursday, May 04, 2006

தனித்தனி அல்ல

உன்னை
ஒட்டி ஓட்டி இருந்தாலும்
எதுவும் நீயும்
ஒன்று அல்ல
வேறு வேறுதான்
நாம்
தள்ளித்தள்ளி இருந்தாலும்
தனித்தனி அல்ல
ஒன்றுதான்.

-பி.எம்.நாகராஜன்

மயில்

அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சும் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயிலிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!

உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல்உன் தனிக்கொத்து! ஸபாஷ்! கரகோஷம்!

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
இவைகள் என்னை எடுத்துப் போயின!

இப்போது, என் நினைவு என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்;
நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்!
நிசம்அது! நிசம்! நிசம்! - நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ,
கறையொன் றில்லாக் கலாப மயிலே,
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,
மனதிற் போட்டுவை, மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற்காக!

புவிக்கொன்றுரைப்பேன்; புருஷர் கூட்டம்,
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!

-பாரதிதாசன்

Wednesday, May 03, 2006

காடு

முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்!
முட்டுகருங் கற்களும்நெருங்கும்-மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்தடுங்கும் உள்
நடுங்கும்


கிட்டிமர வேர்கள்பல கூடும்- அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும்- பாடி
மட்டையசை வால்புலியின்
குட்டிகள் போய்த் தாய்புலியைத்
தெடும்- பின்
வாடும்.

நீள் கிளைகள் ஆல்விழுதி னோடு -கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு- கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால் கழற்றிப் பாயவருங்
காடு -பள்ளம்!
மேடு!

கோளாடும் கிளம்பிவரும் பன்றி- நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி- மிகு
தூளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி
குன்றில்- புகும்
ஒன்றி

வானிடைஓர் வானடர்ந்து வாறு- பெரு
வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல
தேனடை சொரிந்ததுவிம்
தென்னை மரம் ஊற்றியதும்
ஆறு- இன்பச்
சாறு!

கானிடைப் பெரும்பறவை நோக்கும்- அது
காலிடையே காலிகளைத் தூக்கும்- மற்றும்
ஆனினம் சுமந்தமடி
ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும்- அடை
ஆக்கும்.

-பாரதிதாசன்

Tuesday, May 02, 2006

எல்லாம் நீயே

ஆல் இலையில்
கால் கடிக்கும் கண்ணா

மண்ணையும் வெண்ணையும்
என்னையும் தின்பவனே கண்ணா

குயிலோசை குழலோசை
உயிரோசை நீயே கண்ணா

எனக்குப் பிடித்த

நீல வண்ணம் நீ
நிலையான காதல் நீ
படிக மாலை நீ
பாரதிப் பாடல்கள் நீ
குறும்புகள் நீ
குழந்தைத்தனம் நீ
அலைகடல் நீ
ஆனந்த தாண்டவம் நீ

எனக்குப் பிடித்த

வெள்ளைத் தாமரை நீ
வினாயகர் பொம்மை நீ
இளநீர் நீ
இசைத்தொகுப்பு நீ
காட்டு அருவி நீ
சிட்டுக் குருவி நீ
படகு சவாரி நீ
பனிச் சாரல் நீ

எனக்குப் பிடித்த

நகைச்சுவை நீ
நவராத்திரி கொலு நீ
சுவையான உணவு நீ
சிற்பங்கள் நீ
கலாச்சாரம் நீ
கவியரங்கம் நீ
முத்தங்கள் நீ
முழு நிலவு நீ

எனக்குப் பிடித்த

தியாகராசர் ஆராதினை நீ
திருமலை உற்சவம் நீ
வேடிக்கை விழையாட்டு நீ
வேதங்கள் மந்திரங்கள் நீ
ஆங்கில இலக்கியம் நீ
அழகான சோலை நீ
மழைச் சாரல் நீ
மனித நேயம் நீ

என்
திமிர் நீ
தன்னம்பிக்கை நீ
தன்மானம் நீ
உண்மைகள் நீ

என்
அம்மா நீ
குழந்தை நீ
சொந்தம் நீ
உலகம் நீ
எனக்கு
எல்லாம் நீயே
கண்ணா.

-பி.எம்.நாகராஜன்

குழந்தை

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வாழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவையத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மழலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட்டோமோ?
செம்பவழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்று! சிரித்து வானமே!

-பாரதிதாசன்

Friday, April 28, 2006

தேடல்

என்றென்றும்
என் விழிகளின்
தேடலுக்கான அர்த்தம்
தேவதையே!
நீ மட்டும்தான்

உன் சுட்டு விரல்களில்
இந்த பூமி
முட்டி முடிக்கட்டும்
தன் இறுதி சுழற்சியை

-பி.எம்.நாகராஜன்

ஊர்சுற்றி

சூரியனே! இந்த பூமி
தன்னைத்தானே சுற்றினாலும்
உன்னைத்தானே சுற்றுகிறேன்
இவர்களின் ஒரு நாள் பார்வைக்கு
நான் ஒரு ஊர்சுற்றி
ஆனால் என் வருட பார்வைக்கு
நான் ஒரு உன்னைச்சுற்றி

-பி.எம்.நாகராஜன்

Thursday, April 27, 2006

பனித்துளி

காலைக் கதிரவனைக்
காணும் போதெல்லாம் - என்னை
புறக்கணிக்கும்
பூவே உன் மீது
பனித்துளி எனக்கு
இனியென்ன வேலை?

-பி.எம்.நாகராஜன்

இல்லம்

செல்வமே!
என் உடலின்
ஒவ்வொரு செல்லும்
உன் இனிய இல்லம்

உன் விரல்கள்
அரைத்துத் தருமானால்
அரளி விழுதும் எனக்கு
அடை பாயாசம் தான்.

- பி.எம்.நாகராஜன்

Wednesday, April 26, 2006

தமிழ்

நீ
முத்தமிழும் இல்லை
முதல் தமிழும் இல்லை
என் மூச்சுத் தமிழ்

நீ
ஊடல் தமிழும் இல்லை
கூடல் தமிழும் இல்லை
என் தேடல் தமிழ்.

நீ
செந்தமிழும் இல்லை
சுந்தரத்தமிழும் இல்லை
என் சொந்தத் தமிழ்

எனக்கு என்னை
வெருக்கத் தெரியும்
உன்னை மறக்ககூட
தெரியாது.

- பி.எம்.நாகராஜன்

Tuesday, April 25, 2006

அனுமதிக்காதே

நீ சூரியன்
நான் பூமி
உன் பார்வையிலிருந்து
மறையும் போது
இருளாகத்தான்
இருப்பேன்.

நீ நிலா
நான் நீரோடை
என்னில் மட்டும் தான்
நீ தெரிவாய்.

நீ என் சுவாசம்
என்னைத் தவிர
உன்னைத் தழுவ வருவது
ஆண்டவன் என்றாலும்
அனுமதிக்காதே.
தயவு செய்து
தவிர்த்து விடு.

- பி.எம்.நாகராஜன்