Saturday, February 23, 2008

வெளிச்சம்

அலைக்கழிவாய் தொடங்கும்
நகரவாழ்வில்
பயணம் தொடங்க முடியாமல்
சாத்தப் பட்டிருக்கும்
கதவுகளின் வழியே
இடுக்கிக் கொண்டு பார்க்கிறது
அமைதியின் கண்கள்
பனி பொழியும் இரவொன்றில்
இருள் கவ்வும் பாதையில்
நகரின் மயான அமைதியொன்றை
வெளிச்சமிட்டுக் காட்டுகிறது நிலா

- ஜி. மஞ்சுளா

வரம்

சாமியார் மட
சந்தில் உள்ளது
அச்சாம்பல் நிறப்புற்று.
சாயங்காலம்
செந்தூர வர்ணம்கொள்ளும்
பாம்பில்லாத புற்றுக்கு
நாள்தோறும்
பாலூற்றத் தவறமாட்டாள்
நண்டு என்ற நாச்சியார்
முட்டையின் மேலோடு
உடைத்துக் காலடியில் வைக்க
மஞ்சள் கரு
வானம் பார்க்கும்
கறையான் கருக்கொள்ளாத
புற்றிடம் சுற்றிவந்து
பிள்ளை வரம் கேட்டவள்
போன வருடம்
ஒரு வெள்ளை நாளின்
இரவுப் பொழுதில்
பிள்ளை ஒன்றை ஈன்றெடுத்தாள்
இப்போதும் சுற்றுகிறாள்
கால நேரமற்று,
புற்றெல்லாம் பரவிக்கிடக்கிறது
இன்னொருவனின் கருப்பு நிழல்.

- ப. முருகன்

Friday, February 22, 2008

விட்டு விடுதலையாகி

குதிரையை லாயத்தில் கட்டு
கடிவாளம் கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்
நடந்து செல்
நாற்றிசையும் கூர்ந்து நோக்கு;
மனிதர்களை
விலங்குகளை;
புழுபூச்சிகளை,
பறவைகளை,
மலர்களை,
மரங்களை,
உறுமிச்செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி;
அண்ணாந்து வான் நோக்கு
அதிசயங்களில் மெய்மற
குனிந்து பூமியை தரிசி
எதேனும் பிடிபட்டால்
எடுத்துச்செல்
இல்லையேல்
உண்டுறங்கி ஓய்வு கொள்.

- சின்ன் கபாலி, காலச்சுவடு

Thursday, February 21, 2008

உலக மகாயுத்தம்

ஒரு கூரைமேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை.
அணில் துரத்த
காக்கை பறந்தது
காக்கை பறக்க
அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது; காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

- ஆத்மானாம்

Wednesday, February 20, 2008

கேள்விக்கணைகள்

கண்ணெதிரே காண்கின்ற கொடுமைகளை கண்டு
கேள்விகள் எழுவது இயல்பல்வா?

என்னுள் கேள்விக் குறிகள்
வேள்வி நடத்திக் கொண்டிருக்கின்றன..

வெள்ளை பணத்தை விருத்தி செய்பவன்
கருப்பு பணத்திடம் கையேந்துவதேன்

காலை வெட்டி மலை உடைத்து நாடு சமைப்பவன்
வீடின்றி வீதிமுனையில் வாடுவதேன்

மணிமேகலை பார்த்த மணித்திருநாட்டில்
பட்டினி சாவோலை தொடர்வதேன்

என்னுள் கேள்விக் குறிகள் இன்னும்
வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்றன.

- சித்ரா

Friday, February 15, 2008

என் வாழ்வின் அர்த்தங்கள்

மலரின் மணம்
மண்ணில் மடியும் வரைதான் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தம் - நான்
வாழும் வரைதான்...
வாழ்ந்த கோடிகளில்
நிலைத்து நிர்க்கும் முகங்கள் சில...
நிந்திக்கப்பட்ட நிபந்தனைகள் போல்
நிலைத்து நிற்க்கும் நினைவுகள் போல்
வார்த்தைக்குள் உள்ளார்ந்த அர்த்தம் போல்
வாத்தியங்களுக்கு உயிராகும் இசை போல் - என்
வாழ்க்கையையும் அர்த்தமானதாக்குகிறேன்..
என்னுள் மறைந்திருக்கும் உணர்வுகளுக்கும்,
உணர்ச்சிகளுக்கும் உயிரோட்டம் காட்டுகிறேன்.
நான் காதலிக்கிறேன் உண்மைதான்
இயற்க்கையை காதலிக்கிறேன்.
இறைவன் படைப்புகளை காதலிக்கிறேன்.
உண்மையை காதலிக்கிறேன் - என்
உணர்ச்சிகளை காதலிக்கிறேன்.
அனைத்திற்க்கும் மேலாக நான்
என்னையே காதலிக்கிறேன் - ஆம்
வேதத்தில் சொல்லப்படுகின்ற வேதாந்தங்கள் போல
என் வேதனைகளை வார்த்தையாக்கினால்
கவிதைக்கு பதிலாக கண்ணீர்தான் வரும் - ஆனால்
வேதனைகளையும், வாழ்வின் சோதனைகளையும்
காதலிக்கப் பழகியதால் சோதனையிலும்
சுகம் காண்கிறேன்.

காதலிப்பவனுக்குத்தான் கவிதை வரும்
என்றில்லை. வாழ்வில் பல
சோதனைகளையும், துக்கங்ளையும்
சேர்ந்திருந்து சுவைக்கும் போது
கவிதை கணைகள் கார்கால
மழை போல இதய
வானிலிருந்து விழும்.
நடந்து வந்த பாதைகள்
மலருகின்ற நினைவுகள்
நெருங்கி வந்த பந்தங்கள்
வந்து போன வசந்தங்கள்
வாடி நின்ற வார்த்தைகள் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தத்தை நினைவு கூறும்
இதயத்தில் இடி விழுந்து
கண்ணீர் வானில்
கதரிய நாட்கள் பல.

கானல் நீரைச் சுவைக்க விரும்பி
சோதனைச் சுழலில் சிக்கித்தவிப்பவன் போல்
நிரைவேரா ஆசைகளை
நிரைவேற்ற எண்ணி - பல
போராட்டங்களைப் போராடியிருக்கிறேன்.

ஆனால்...
நான் சலைத்தவன் அல்ல
போர் கொடி தூக்கிய போராட்டங்களுக்கும்
முடிவுகள் உண்டு - ஆனால்
என் வாழ்க்கை போராட்டத்திற்கோ
இறப்பில்தான் முடிவு - ஆம்
வாழ்க்கையே ஓர் போராட்டம் தானே...

ஒவ்வொரு யுகங்களும்
யுத்தங்களாக வருகின்றன.

என் வாழ்க்கையில் வசந்தங்களாய்
வந்த வஞ்சிகள் பலர் - ஆம்
அவர்கள் வசந்தங்களைப் போல்
அடிக்கடி மாறிவிடுகின்றனர்...

ஓ!
மாற்றம் ஒன்றே நிலையானது
என்பது இதனால்தானோ!...
என் வாழ்க்கை கட்டத்தில்
இனிய நினைவுகளும், இதயம்
விரும்பிய மலர்களும் ஏராளம் - ஆம்
மலரின் மனம்
மாலைக்குள் மறைந்து விடுவது போல்
என் வாழ்வின் வசந்தங்களும்.......

- ச. ஷாரங்கன்.

Thursday, February 14, 2008

காதலன்

உட்காரப் புல்வெளி
எதிரே நீர்வெளி
நீர்போல் எண்ணையாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத் தூர இரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்
எல்லாம் தவிர்த்து
கவனமாய் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டையைக் கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு மீனைக்
காணும் ஆவலுடன்...

-ச. ஷாரங்கன்.

Monday, February 11, 2008

நீ

கோதிக் கலைக்கிறது காற்று
உன் கேசத்தை. நீ
விரல் எழுப்பி சரி பண்ண
ஆகாயத்தில் பறக்கிறது வெண் கொக்கு.
கையில் பிடிக்கவும், கூடப் பறக்கவும்
மீளாது
கேசம் கலைக்கும் காற்றின்
வெளியில் நான்.

அப்பாச், கால்ச்சுவடு

குருவிக்கூடு

நிலத்தை ஆக்கிரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு.
இரண்டடி இடத்தையே எடுத்துக்கொண்டு
உயர்ந்து.
தன் அன்பை விரித்திருந்தது மரம்.
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது.
நான் அமர்ந்திருந்த அந்த மொட்டைமாடி.

-தேவதேவன், காலச்சுவடு

Saturday, February 09, 2008

மாற்றான் தோட்டம்

காலை நேரம்
சூரியகாந்தித் தோட்டம்
கிழக்கிலிருந்து பார்த்தேன்
தோட்டத்தின் எல்லா முகங்களும்
என்னைத்தான் நோக்குவதாக நோக்கி
என் முகம் இளித்து கொண்டிருக்க,
சுள்ளென்று என் பிடறியில்
சூரிய முகத்தின் கெக்கலி.
அக்கணம் அவ்விடம் நான்
ஒரு கோமாளி போல.


- ராஜசுந்தரராஜன், காலச்சுவடு

Tuesday, February 05, 2008

பிரதிபலிப்பு

மகிழம் பூப்போல
உறுத்தாமல் முகத்தில் விழும்
குளிர் மழைச்சாரல்.
ஜன்னல் கம்பிகளுக்குப்பின்
எட்டிப்பார்க்கும் அணில் குஞ்சு.
கால் மேல் கால் போட்டு
மோனத்தில் சிரிக்கும் குழந்தை.
அகல் விழக்கின் மெல்லிய
தீஞ்சுடர்.
இவைகள் எனக்கு உன்னை
ஞாபகப்படுத்துவது போல
நீ எனக்கு இவைகளை.

- மாலினி புவனேஷ், காலச்சுவடு

Saturday, January 12, 2008

தூக்கம்

தற்காலிக தூக்கத்திற்க்காக
ஓர் நிரந்திர தூக்கம்
கொசுவின் கொலை

- ஜெயச்சந்திரன்

Monday, January 07, 2008

இருபுறம்

என்
ஒருபுறம் அல்ல
மறுபுறம் அல்ல
இருபுறமும் நீதான்
என்னோடு இருக்கும்
உன்னைப் பிரித்தால்
மண்ணோடு மண்ணாகத்தான்
மடிந்து வீழ்வேன்.


- பி.எம்.நாகராஜன்

Monday, July 03, 2006

மழைத்துளி

பன்னீர்துளிகள்
வேண்டாம் - உன்
வியர்வைத்துளிகள்
போதும் - அது
மண்வாசனையை
கிளப்பும்
மழைத்துளி

-பி.எம்.நாகராஜன்

பெருந்தலைவர் காமராஜ் - பகுதி : 1

இந்திய சுதந்திர பொன்விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா சிறப்பு கவியரங்கத்தில் கல்லூரிகள் அளவில் முதல் பரிசினை பெற்று இந்தியவானொலியின் நாகர்கோவில் பிரிவில் ஒலிப்பரப்பப்பட்ட கவிதை.

நான்
குருசேத்திரத்தில்
குருவானவன்
ஜெருசேலத்தில்
கருவானவன்
உன்
முகக்கண்ணுக்கு தெரியாத
மூச்சுக்காற்று நான்
யுகம் தோறும்
முகம் எனக்கு வேறு
நான் ஒன்றுதான்
நீ
இந்து எனில்
நான் இஸ்லாம்
நீ
இஸ்லாம் எனில்
நான் கிறிஸ்து

சிந்தித்து சிந்தித்து
சிந்தனை சிக்காகிவிட்டதா?
பேனா
பேமாரித்தனம் செய்கிறது
சிந்தனை
சீமத்தனம் செய்கிறதா?
நீ
கருவாவதற்கு முன்பே
கல்லறையானவனை கவியரங்கின்
கருவாக்கிவிட்டார்களே!
சொல்லிவிட்டால்
கொல்லிமலையும்
இடம்பெயர்ந்து வரும்
இவனை இதிகாசமாக்க
உன்
கவிதைகளா இந்த
காவியணியாதவனை
காவியமாக்கப்போகிறது?
அவன் கோவில்

காமராஜ்
கல்கியின்
பொன்னியின் செல்வன்
இல்லை
குமாரசாமியின்
சிவகாமியின் செல்வன்

கோகினூரிலிந்து
கொள்ளையடிக்கப்பட்ட
வைரம் இல்லை
விருதுப்பட்டியிலிருந்து
வெட்டி எடுக்கப்பட்ட
கட்டித்தங்கம்

தமிழுக்கு
தனியிலக்கணம் தந்த
தொல்காப்பியன்
இல்லை
அரசியலுக்கு
அணியிலக்கணம் தந்த
சொல்காப்பியன்

காமத்துப்பால்
கலவாத திருக்குறள்
இதுவரை
அறத்துப்பாலில் இணையாத
அதிகாரம்

பல்கலைக் கழக
பெயர்ப்பலகை மட்டுமல்ல
காமராஜ் - அவன்
கட்டாயபாடமாக வேண்டிய
பாடத்திட்டம்.

காற்றில்
கரைந்து போகும்
கற்பூரமல்ல
காமராஜ்
கப்பலை கரைசேர்த்த
நங்கூரம்
தமிழனுக்கு
கர்வம் தந்த
கம்பீரம்

எல்லையைத்
தாண்டி வந்து
குமரியின்
தாகம் தீர்த்த
தாமிரபரணி

திருவாசகத்தில்
ஒருவாசகம்கூட
பயிலாத
பெருவாசகம்

இந்தியாவின்
பட்டத்து யானை
அவன்
ஆள்காட்டி விரலில்
பிரதமர்களின்
பட்டியல்
ஆடிப்போகும்

காமராஜ்
வெல்ல முடியாத
வெற்றி
மூழ்க முடியாத
ஆழம்
ஏறமுடியாத
உயரம்
கடக்க முடியாத
தூரம்
கணக்கிட முடியாத
எண்ணிக்கை

அவன்
தொண்டுகளை
அடுக்கினால் அதன்
கொண்டையில்
வானம் தட்டும்
இன்றுவரை
பூமி சுற்றிய
சுற்றுகளின் மொத்தம்
அவற்றைப்
புத்தகமாக்க
இந்த பூமியில்
பதிப்பகங்கள்
பத்தாது
அது
தொட்க்கம் தெரியாத
பூமியின் பாதை
பாதியில் நிற்கும்
பாரதியின்
பாஞ்சாலி சபதம்
மீதியைத் தர
மீண்டும் அவனே
வரவேண்டும்

காமராஜ்
வாடகை வீட்டில்
வாழ்ந்த
கொத்தனார்
மாற்றுத்துணி
இல்லாத
நெசவாளி
கருப்பு நிறத்தில்
கரந்த பால்
ஆறடி உயர
திருவிளக்கு
நடை பாதைக்கும்
வெளிச்சம் தந்த
நகராட்சி
தெருவிளக்கு.

-பி.எம்.நாகராஜன்

Friday, June 16, 2006

எங்கள் நாடு

ராகம்- பூபாளம்

1. மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இதுபோல?
பொன்னொளிர் பார தநாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

2. மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன் யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

3. இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையைவிரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடெ
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

-பாரதியார்

Thursday, June 15, 2006

போகின்ற பாரதமும், வருகின்ற பாரமும்

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

1. வலிமை யற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒ டுங்கினாய் போ போ போ
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலிய ழந்த குரலினாய் போ போ போ
ஒளிய ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினியாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

2. இன்று பார தத்திடை நாய் போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்றி கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்கவாய் போ போ போ

3. வேறு வேறு பாஷைகளை கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ


4. ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றவனை போ போ போ

வருகின்ற பாரத்தை வாழ்த்தல்)

5. ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

6. மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற வஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள், சீர்த்
தேசமிது தோன்றுவாய் வா வா வா

7. இளய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளி யிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த் தன்போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா.

8. வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்குளுய்யவே நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செவ்வாய் வா வா வா

-பாரதியார்

வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பா

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளரந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


-பாரதியார்

Wednesday, June 14, 2006

சுதந்திரம் தாகம்

(தாளம்- ஆதி; ராகம்- கமாஸ்)

1. என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?
என்றெம தன்னகை விலங்குள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை அதரிப் போனே!
வென்றி தருந்துனை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும்வாடுதல் நன்றோ?

2. பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்லென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!

-பாரதியார்

Tuesday, June 13, 2006

தமிழ் நாடு

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே_ இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு_ உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு_ நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு_ தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி_ என
மேவிய யாறு பலவோடத்_ திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே_ நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில்_ நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை_ வட
மாலவன் குன்றம் இவற்றிடையே_ புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு_ புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு_ நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின்_ மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்_ மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி_ அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்_ எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்_ சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார்_ தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம்_ இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

-பாரதியார்