Wednesday, June 07, 2006

கன்னியாக்குமரி

அம்மா!

சிவனுக்கே தன்னைத்தர
தவம் செய்த தாயே!
கார்த்தியாயினியே!
கன்னியாக்குமரியே!

மகளாகப் பிறந்து - என்
மண்ணைப் புகழாக்கினாயே!
கன்னியாக நின்று - உன்
காதலைப் புனிதமாக்கினாயே!

முக்கடலே மகராசி! - உன்
மூக்குத்தி மகிமைக்கு
திறவாமல் வைத்திருக்கும்
நின் கிழக்கு திருநடையே சாட்சி

அம்மா!
சுற்றும் பூமிக்கு - உன்
சுட்டு விரலே அச்சு
கதிரவன் குளிருக்கு - உன்
கார் குழலே போர்வை.
இமயத்தின் வியர்வைக்கு- உன்
இமைகளே விசிறி
கரும்பின் நாகசப்புக்கு - உன்
திருநாமமே இனிமை
ஆகாயம் உறங்க - உன்
அடிநகமே பாய்.

தாலாட்டும் தென்றலில் - உன்
தாய்மை தெரியுதம்மா.
சங்குகள் சிப்பிகளில் - உன்
தூய்மை தெரியுதம்மா
சீறிவரும் அலைகளில் - உன்
சினம் தெரியுதம்மா
கரையிலாக் கடலே - உன்
மனம் தெரியுதம்மா

திருகல்யாண விருந்தின்
அறுசுவை உண்வுகளும்
விதவிதமான மணலானது
விந்தையா! வினோதமா!

அடையவந்த அசுரனை
அடையாளம் தெரியாத
சிறுசிறு துண்டாக கிளித்து
பெருங்கடலில் எறிந்தவளே
பெரிய நாயகியே!

ஜெபமாலை தாங்கிய
ஜெகன்மோகினியே தேவி
உன் தரிசனமே
உலகில் உயிர்களுக்கு
ஜென்ம பலனம்மா!


-பி.எம்.நாகராஜன்

No comments: