Saturday, February 23, 2008

வரம்

சாமியார் மட
சந்தில் உள்ளது
அச்சாம்பல் நிறப்புற்று.
சாயங்காலம்
செந்தூர வர்ணம்கொள்ளும்
பாம்பில்லாத புற்றுக்கு
நாள்தோறும்
பாலூற்றத் தவறமாட்டாள்
நண்டு என்ற நாச்சியார்
முட்டையின் மேலோடு
உடைத்துக் காலடியில் வைக்க
மஞ்சள் கரு
வானம் பார்க்கும்
கறையான் கருக்கொள்ளாத
புற்றிடம் சுற்றிவந்து
பிள்ளை வரம் கேட்டவள்
போன வருடம்
ஒரு வெள்ளை நாளின்
இரவுப் பொழுதில்
பிள்ளை ஒன்றை ஈன்றெடுத்தாள்
இப்போதும் சுற்றுகிறாள்
கால நேரமற்று,
புற்றெல்லாம் பரவிக்கிடக்கிறது
இன்னொருவனின் கருப்பு நிழல்.

- ப. முருகன்

No comments: