Sunday, June 29, 2008

நானில்லை

நீ
ஊதியவுடன் அணைந்து விட
நான் ஒன்றும்
திரி விளக்கு அல்ல.
தினம் தினம்
புதியதாய்
உதித்துவரும் சூரியன்
என்னைத் தீண்டிய
உன் கைகள்
கருகாமல்
இருந்திருந்தால்
நீ தீண்டியது
சத்தியமாக நானில்லை

- பி. எம். நாகராஜன்

நீந்தக் கற்றுக்கொள்

வைகையாக இருந்தால்
ஒரு நாள் வற்றும்.
ஜீவநதி சிந்துவாக இருந்தால்?
நீர் தீரும்வரை
காத்திருப்பதைவிட
நீந்தக்கற்றுக்கொள்
கரை உன் காலடி
தேடி வரும்

பி.எம்.நாகராஜன்

Monday, April 07, 2008

சொந்தம்

இத்தனை இரவுகள்
கடந்து வந்திருக்கிறேன்
எத்தனை சொந்தங்கள்
நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே
நிலவு
இன்று ஏனோ உணர்கிறேன்
பிரிவை
சூரியனைப் பிரிந்து உறங்காமல்
தேய்ந்துகொண்டிருக்கும்
நிலவு!

- மங்கை

Thursday, March 27, 2008

இரவின் விடியல்

புதிய
வெளிச்சத்தைப்
பார்த்த பரபரப்பில்
விளக்கின் மீதே
விழுந்த விட்டில்கள் நாம்!

சுட்டபொழுது
சுதாரித்துக்கொண்டோம்
விழுங்கிய தீயையே
தீபமாக்கி
நம்மில் எரியவிட்டு
மின்மினிகளானோம்!

கோடானுகோடி
மின்மினிகள்
கூடியதால்
இருளின் சிறகுகள்
படபடக்க
இரவிலேயே விடிந்தது!

- மதீன் சையத்

Tuesday, March 25, 2008

தீர்ப்பு

மனிதம் மறந்த
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?

- பெ.நாயகி

Tuesday, March 18, 2008

தீர்ப்பு

மனிதம் மறந்த
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?

- பெ.நாயகி

Monday, March 17, 2008

ஒன்றும் இல்லை

அள்ளி வீசுகிறாய்
அனைத்துக்குமான உதாரணங்களை
எப்போதாவது உரைத்துள்ளாயா
உதாரணத்துக்கான உதாரணத்தை?
உதாரணம் உண்மையாகில்
உதாரணத்தின் உதாரணம்
உண்மையாகும்தானே?
அதை விடு
எனக்கோ உனக்கோ
என்ன உதாரணம்?
எனக்கு நீயும் உனக்கு நானுமாய்
உதாரணமாவது சாத்தியமாகுமா?
உதாரணங்களின் மூல உதாரணத்தை
உய்த்தறியும்வரை
உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை போ!
ஒன்றுமேயில்லை
போ!போ!

-நட்சத்ரன்

Saturday, March 15, 2008

நினைவுப் பரிசு

எல்லா பிறந்த நாட்களிலும்
உன் நினைவுப் பரிசு
என்னிடம்.
அவற்றை விட
நீ எனக்கில்லை என்றான
நாள் மட்டும்
முதன்மையான
நினைவுப் பரிசாய்!

- ரிஷபன்

Saturday, February 23, 2008

வெளிச்சம்

அலைக்கழிவாய் தொடங்கும்
நகரவாழ்வில்
பயணம் தொடங்க முடியாமல்
சாத்தப் பட்டிருக்கும்
கதவுகளின் வழியே
இடுக்கிக் கொண்டு பார்க்கிறது
அமைதியின் கண்கள்
பனி பொழியும் இரவொன்றில்
இருள் கவ்வும் பாதையில்
நகரின் மயான அமைதியொன்றை
வெளிச்சமிட்டுக் காட்டுகிறது நிலா

- ஜி. மஞ்சுளா

வரம்

சாமியார் மட
சந்தில் உள்ளது
அச்சாம்பல் நிறப்புற்று.
சாயங்காலம்
செந்தூர வர்ணம்கொள்ளும்
பாம்பில்லாத புற்றுக்கு
நாள்தோறும்
பாலூற்றத் தவறமாட்டாள்
நண்டு என்ற நாச்சியார்
முட்டையின் மேலோடு
உடைத்துக் காலடியில் வைக்க
மஞ்சள் கரு
வானம் பார்க்கும்
கறையான் கருக்கொள்ளாத
புற்றிடம் சுற்றிவந்து
பிள்ளை வரம் கேட்டவள்
போன வருடம்
ஒரு வெள்ளை நாளின்
இரவுப் பொழுதில்
பிள்ளை ஒன்றை ஈன்றெடுத்தாள்
இப்போதும் சுற்றுகிறாள்
கால நேரமற்று,
புற்றெல்லாம் பரவிக்கிடக்கிறது
இன்னொருவனின் கருப்பு நிழல்.

- ப. முருகன்

Friday, February 22, 2008

விட்டு விடுதலையாகி

குதிரையை லாயத்தில் கட்டு
கடிவாளம் கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்
நடந்து செல்
நாற்றிசையும் கூர்ந்து நோக்கு;
மனிதர்களை
விலங்குகளை;
புழுபூச்சிகளை,
பறவைகளை,
மலர்களை,
மரங்களை,
உறுமிச்செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி;
அண்ணாந்து வான் நோக்கு
அதிசயங்களில் மெய்மற
குனிந்து பூமியை தரிசி
எதேனும் பிடிபட்டால்
எடுத்துச்செல்
இல்லையேல்
உண்டுறங்கி ஓய்வு கொள்.

- சின்ன் கபாலி, காலச்சுவடு

Thursday, February 21, 2008

உலக மகாயுத்தம்

ஒரு கூரைமேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை.
அணில் துரத்த
காக்கை பறந்தது
காக்கை பறக்க
அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது; காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

- ஆத்மானாம்

Wednesday, February 20, 2008

கேள்விக்கணைகள்

கண்ணெதிரே காண்கின்ற கொடுமைகளை கண்டு
கேள்விகள் எழுவது இயல்பல்வா?

என்னுள் கேள்விக் குறிகள்
வேள்வி நடத்திக் கொண்டிருக்கின்றன..

வெள்ளை பணத்தை விருத்தி செய்பவன்
கருப்பு பணத்திடம் கையேந்துவதேன்

காலை வெட்டி மலை உடைத்து நாடு சமைப்பவன்
வீடின்றி வீதிமுனையில் வாடுவதேன்

மணிமேகலை பார்த்த மணித்திருநாட்டில்
பட்டினி சாவோலை தொடர்வதேன்

என்னுள் கேள்விக் குறிகள் இன்னும்
வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்றன.

- சித்ரா

Friday, February 15, 2008

என் வாழ்வின் அர்த்தங்கள்

மலரின் மணம்
மண்ணில் மடியும் வரைதான் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தம் - நான்
வாழும் வரைதான்...
வாழ்ந்த கோடிகளில்
நிலைத்து நிர்க்கும் முகங்கள் சில...
நிந்திக்கப்பட்ட நிபந்தனைகள் போல்
நிலைத்து நிற்க்கும் நினைவுகள் போல்
வார்த்தைக்குள் உள்ளார்ந்த அர்த்தம் போல்
வாத்தியங்களுக்கு உயிராகும் இசை போல் - என்
வாழ்க்கையையும் அர்த்தமானதாக்குகிறேன்..
என்னுள் மறைந்திருக்கும் உணர்வுகளுக்கும்,
உணர்ச்சிகளுக்கும் உயிரோட்டம் காட்டுகிறேன்.
நான் காதலிக்கிறேன் உண்மைதான்
இயற்க்கையை காதலிக்கிறேன்.
இறைவன் படைப்புகளை காதலிக்கிறேன்.
உண்மையை காதலிக்கிறேன் - என்
உணர்ச்சிகளை காதலிக்கிறேன்.
அனைத்திற்க்கும் மேலாக நான்
என்னையே காதலிக்கிறேன் - ஆம்
வேதத்தில் சொல்லப்படுகின்ற வேதாந்தங்கள் போல
என் வேதனைகளை வார்த்தையாக்கினால்
கவிதைக்கு பதிலாக கண்ணீர்தான் வரும் - ஆனால்
வேதனைகளையும், வாழ்வின் சோதனைகளையும்
காதலிக்கப் பழகியதால் சோதனையிலும்
சுகம் காண்கிறேன்.

காதலிப்பவனுக்குத்தான் கவிதை வரும்
என்றில்லை. வாழ்வில் பல
சோதனைகளையும், துக்கங்ளையும்
சேர்ந்திருந்து சுவைக்கும் போது
கவிதை கணைகள் கார்கால
மழை போல இதய
வானிலிருந்து விழும்.
நடந்து வந்த பாதைகள்
மலருகின்ற நினைவுகள்
நெருங்கி வந்த பந்தங்கள்
வந்து போன வசந்தங்கள்
வாடி நின்ற வார்த்தைகள் - என்
வாழ்க்கையின் உள்ளர்த்தத்தை நினைவு கூறும்
இதயத்தில் இடி விழுந்து
கண்ணீர் வானில்
கதரிய நாட்கள் பல.

கானல் நீரைச் சுவைக்க விரும்பி
சோதனைச் சுழலில் சிக்கித்தவிப்பவன் போல்
நிரைவேரா ஆசைகளை
நிரைவேற்ற எண்ணி - பல
போராட்டங்களைப் போராடியிருக்கிறேன்.

ஆனால்...
நான் சலைத்தவன் அல்ல
போர் கொடி தூக்கிய போராட்டங்களுக்கும்
முடிவுகள் உண்டு - ஆனால்
என் வாழ்க்கை போராட்டத்திற்கோ
இறப்பில்தான் முடிவு - ஆம்
வாழ்க்கையே ஓர் போராட்டம் தானே...

ஒவ்வொரு யுகங்களும்
யுத்தங்களாக வருகின்றன.

என் வாழ்க்கையில் வசந்தங்களாய்
வந்த வஞ்சிகள் பலர் - ஆம்
அவர்கள் வசந்தங்களைப் போல்
அடிக்கடி மாறிவிடுகின்றனர்...

ஓ!
மாற்றம் ஒன்றே நிலையானது
என்பது இதனால்தானோ!...
என் வாழ்க்கை கட்டத்தில்
இனிய நினைவுகளும், இதயம்
விரும்பிய மலர்களும் ஏராளம் - ஆம்
மலரின் மனம்
மாலைக்குள் மறைந்து விடுவது போல்
என் வாழ்வின் வசந்தங்களும்.......

- ச. ஷாரங்கன்.

Thursday, February 14, 2008

காதலன்

உட்காரப் புல்வெளி
எதிரே நீர்வெளி
நீர்போல் எண்ணையாய்
சூரியன்
பால் சொட்டுகளாய்
பறவைகள்
முட்டாமல் மோதாமல்
இணக்கமாய் காற்று
தூரத் தூர இரயிலோசைக்கும்
செவி கூசும் நிசப்தம்
எல்லாம் தவிர்த்து
கவனமாய் காத்திருக்கிறான்
கரையில் ஒருவன்
தொண்டையைக் கிழித்து
கண்ணைத் துளைத்த
தூண்டில் முள்ளுடன்
துடிக்கும் ஒரு மீனைக்
காணும் ஆவலுடன்...

-ச. ஷாரங்கன்.

Monday, February 11, 2008

நீ

கோதிக் கலைக்கிறது காற்று
உன் கேசத்தை. நீ
விரல் எழுப்பி சரி பண்ண
ஆகாயத்தில் பறக்கிறது வெண் கொக்கு.
கையில் பிடிக்கவும், கூடப் பறக்கவும்
மீளாது
கேசம் கலைக்கும் காற்றின்
வெளியில் நான்.

அப்பாச், கால்ச்சுவடு

குருவிக்கூடு

நிலத்தை ஆக்கிரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு.
இரண்டடி இடத்தையே எடுத்துக்கொண்டு
உயர்ந்து.
தன் அன்பை விரித்திருந்தது மரம்.
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது.
நான் அமர்ந்திருந்த அந்த மொட்டைமாடி.

-தேவதேவன், காலச்சுவடு

Saturday, February 09, 2008

மாற்றான் தோட்டம்

காலை நேரம்
சூரியகாந்தித் தோட்டம்
கிழக்கிலிருந்து பார்த்தேன்
தோட்டத்தின் எல்லா முகங்களும்
என்னைத்தான் நோக்குவதாக நோக்கி
என் முகம் இளித்து கொண்டிருக்க,
சுள்ளென்று என் பிடறியில்
சூரிய முகத்தின் கெக்கலி.
அக்கணம் அவ்விடம் நான்
ஒரு கோமாளி போல.


- ராஜசுந்தரராஜன், காலச்சுவடு

Tuesday, February 05, 2008

பிரதிபலிப்பு

மகிழம் பூப்போல
உறுத்தாமல் முகத்தில் விழும்
குளிர் மழைச்சாரல்.
ஜன்னல் கம்பிகளுக்குப்பின்
எட்டிப்பார்க்கும் அணில் குஞ்சு.
கால் மேல் கால் போட்டு
மோனத்தில் சிரிக்கும் குழந்தை.
அகல் விழக்கின் மெல்லிய
தீஞ்சுடர்.
இவைகள் எனக்கு உன்னை
ஞாபகப்படுத்துவது போல
நீ எனக்கு இவைகளை.

- மாலினி புவனேஷ், காலச்சுவடு

Saturday, January 12, 2008

தூக்கம்

தற்காலிக தூக்கத்திற்க்காக
ஓர் நிரந்திர தூக்கம்
கொசுவின் கொலை

- ஜெயச்சந்திரன்

Monday, January 07, 2008

இருபுறம்

என்
ஒருபுறம் அல்ல
மறுபுறம் அல்ல
இருபுறமும் நீதான்
என்னோடு இருக்கும்
உன்னைப் பிரித்தால்
மண்ணோடு மண்ணாகத்தான்
மடிந்து வீழ்வேன்.


- பி.எம்.நாகராஜன்