Friday, April 28, 2006

தேடல்

என்றென்றும்
என் விழிகளின்
தேடலுக்கான அர்த்தம்
தேவதையே!
நீ மட்டும்தான்

உன் சுட்டு விரல்களில்
இந்த பூமி
முட்டி முடிக்கட்டும்
தன் இறுதி சுழற்சியை

-பி.எம்.நாகராஜன்

ஊர்சுற்றி

சூரியனே! இந்த பூமி
தன்னைத்தானே சுற்றினாலும்
உன்னைத்தானே சுற்றுகிறேன்
இவர்களின் ஒரு நாள் பார்வைக்கு
நான் ஒரு ஊர்சுற்றி
ஆனால் என் வருட பார்வைக்கு
நான் ஒரு உன்னைச்சுற்றி

-பி.எம்.நாகராஜன்

Thursday, April 27, 2006

பனித்துளி

காலைக் கதிரவனைக்
காணும் போதெல்லாம் - என்னை
புறக்கணிக்கும்
பூவே உன் மீது
பனித்துளி எனக்கு
இனியென்ன வேலை?

-பி.எம்.நாகராஜன்

இல்லம்

செல்வமே!
என் உடலின்
ஒவ்வொரு செல்லும்
உன் இனிய இல்லம்

உன் விரல்கள்
அரைத்துத் தருமானால்
அரளி விழுதும் எனக்கு
அடை பாயாசம் தான்.

- பி.எம்.நாகராஜன்

Wednesday, April 26, 2006

தமிழ்

நீ
முத்தமிழும் இல்லை
முதல் தமிழும் இல்லை
என் மூச்சுத் தமிழ்

நீ
ஊடல் தமிழும் இல்லை
கூடல் தமிழும் இல்லை
என் தேடல் தமிழ்.

நீ
செந்தமிழும் இல்லை
சுந்தரத்தமிழும் இல்லை
என் சொந்தத் தமிழ்

எனக்கு என்னை
வெருக்கத் தெரியும்
உன்னை மறக்ககூட
தெரியாது.

- பி.எம்.நாகராஜன்

Tuesday, April 25, 2006

அனுமதிக்காதே

நீ சூரியன்
நான் பூமி
உன் பார்வையிலிருந்து
மறையும் போது
இருளாகத்தான்
இருப்பேன்.

நீ நிலா
நான் நீரோடை
என்னில் மட்டும் தான்
நீ தெரிவாய்.

நீ என் சுவாசம்
என்னைத் தவிர
உன்னைத் தழுவ வருவது
ஆண்டவன் என்றாலும்
அனுமதிக்காதே.
தயவு செய்து
தவிர்த்து விடு.

- பி.எம்.நாகராஜன்

Monday, April 24, 2006

அநியாயம்

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா!

- படித்ததில் பிடித்தது

Thursday, April 20, 2006

கவிதை

மழைத்துளி தன்னைத்தருமெனில்
வயல்வெளி கவிதை
பனித்துளி தன்னைத்தருமெனில்
புல்வெளி கவிதை
நிலவே! உன்னைத்தருவாயெனில்
வானம் நானும் கவிதைதான்

- பி.எம்.நாகராஜன்

Wednesday, April 19, 2006

அன்பே..

அன்பே..
உன் கண்கள்
என் செயல்களை பார்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் கைகள்
என் கற்பனைகளை வரைகையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் கால்கள்
என் வெற்றி பாதையில் நடக்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் முகத்தை
என் இதயக் கண்ணாடியில் பார்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் காதுகள்
என் இனியவைகளை கேட்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் வார்த்தைகள்
என் மனதை குளிர செய்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் உதடுகள்
புன்னகை பூக்களை உதிர்க்கையில்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் நினைவுகள்
என் சிந்தனையை சீர்படுத்தினால்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
உன் பொன்மொழிகள்
என் வாழ்க்கையில் திருப்புமுனையானால்
அன்பே நீ அழகு தான்.

அன்பே..
என் இதயத்தின் இடைவெளியில்
இயல்பாய் இருக்கையில்
அன்பே நீ அழகு தான்.
ஆயிரம் முறை சொல்வேன்,
அன்பே நீ அழகு தான்!!!

- ஜஹபர் சாதிக்.M

Tuesday, April 18, 2006

ஒட்டாதே

காதலியே
இனி அனுப்பும் கடிதங்களுக்கு
தபால் தலை
ஒட்டாதே
உன் இதயம் சுமந்து வரும்
கடிதங்களுக்கு
அவர்கள் ஓங்கிக் குத்துவதைத்
தாங்க முடியவில்லை

- படித்ததில் பிடித்தது

Monday, April 17, 2006

மேகம்

ஏன் அழுகிறாய்?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலேயே
மழையாக
கரைந்ததற்காகவா!...

- படித்ததில் பிடித்தது

Thursday, April 13, 2006

பாரதம்

ஒவ்வொரு நாளும்
விடியலின் போதும்
நம் இந்தியா
நான் இந்தியன்
நம் மக்கள் இந்தியர்கள்
என்ற உணர்வோடு
விழித்திடு

- புன்னகை மன்னன்

இன்ப வாழ்க்கை

கதிரவனின் சிறு கதிர்கள்
சேர்ந்து ஒளி என்னும் வெளிச்சம்
மழையின் சிறு துளிகள்
சேர்ந்து கடல் என்னும் வெள்ளம்
மணல் கற்குவியல்கள்
சேர்ந்து பூமி என்னும் நடைபாதை
உன் சிறு சிறு பார்வை
சேர்ந்து இன்பம் என்னும் வாழ்க்கை

- புன்னகை மன்னன்

Wednesday, April 12, 2006

உயிர்ச்சொந்தமானவளே...

தூரத்துச் சொந்தமென்று தான்
சொன்னார்கள்...
நீயோ-
ஒற்றைப் பார்வையிலேயே
என்
உயிர்ச் சொந்தமானாய்!

நாலு சுவர்
எழுப்பியதும்
நடுப்பகுதி வீடானது...
வந்து போனாய்
கோவிலானது!

ரத்தமில்லாமல்
நான்
உயிர் வாழ்ந்து விட முடியும்..
உன்
சப்தமில்லாமல்
வாழ முடியுமா?

கூப்பிடு தூரத்தில்
குடியிருப்பவள் நீயென்றால்..
சொந்த ஊர் எதுவென்ற
கேள்விக்கு
சொர்க்கமென்று
சொல்லிருப்பேன்!

முட்கள் நிறைந்தது தான்
என்னுடைய பாதை
ஒத்து கொள்கிறேன்..
கூடவே நீ
வருவதென்றால்
ஊசி முள் அத்தனையும்
ஒரே சீராகக் கூட்டி
உனக்கு
அக்குபங்சர் செருப்பாக
ஆக்கித்தர மாட்டேனா?

கனகாம்பரம்
பறித்த போது
காம்பு உடைந்ததற்கே
'அச்சச்சோ...' என்றவள் நீ..
என்
இதயம் உடைந்தது மட்டும்
எதேச்சை என்கிறாய்!

என் தவிப்பு
உனக்கு
சிரிப்பாகக் கூட் இருக்கலாம்..
இருக்கட்டும்
நீ
சிரிப்பதற்காகவேனும்
நான் தவித்துக்
கொண்டிருக்க வேண்டும்!.

நன்றி
க.ச.கலா, நெல்லை

Mobiles

Monday, April 10, 2006

சிப்பி

முத்தே!
என் முதலே!
செல்லமே
என் சேயே! - உன்னை
செதுக்கி வைத்திருக்கும்
சிற்பியல்ல நான்
பதுக்கி வைத்திருக்கும்
பாசமுள்ள சிப்பி
தொப்புள்கொடி அறுத்து
உன்னை பிரிக்கும்போது
அம்மா அல்லடா நான்
அனாதை பிணம்.

-பி.எம்.நாகராஜன்

Saturday, April 08, 2006

மனதில்...

காகிதம் காற்றில்
பறந்து விடும் என்பதற்காக
கல்லை எடுத்து வைத்தேன்
ஆனால்
என் மனதில் உன் நினைவுகள்
பறந்து கொண்டிருக்கும் போது
எதை எடுத்து வைப்பேன்...

- முல்லைவேந்தன்

சிறை

சிறையிலும் வாழ
விரும்புகிறேன் - அது
உன் இதயச் சிறையாக
இருந்தால் மட்டும்.

- பி.எம்.நாகராஜன்

Friday, April 07, 2006

பக்தி

புத்தியால் நீ
புவியை வெல்லலாம்
பக்தியால் மட்டுமே
சக்தியை வெல்ல முடியும்
தெய்வங்கள் மூவரையும்
தூளியில் தாலாட்டியவளே
அத்திரியின் பத்தினி அனுசுயா

காதலே பக்தி
அதற்கென்று ஏதுமில்லை
அதுவில்லாமல் எதுவுமில்லை

புத்தியிருக்குமானால் அது
பக்தியும் இல்லை
ஆதி சிவனை காலால்
மிதித்தவனே கண்ணப்பன்

கற்பு இல்லையானால் அது
காதலும் இல்லை.
தீயிற்கு மதுரையை
தீனி போட்டவளே கண்ணகி

கண்களே புத்தியின் வழி
கண்னில்லாததே காதல்-பழமொழி
தீச்சட்டி ஏந்துவதும்
தீ மிதிப்பதும்
தன்னையே தருவதும்
பக்தி மட்டுமே.

- பி.எம்.நாகராஜன்

அன்பு

திருமறைகள் எல்லாம்
திருத்தமாகச் சொல்கிறது
அன்பே ஆண்டவன்
அனபே அனைத்தும்
அதுவால் முடியாதது
எதுவும் இல்லை

நேசத்தால் வஞ்சிப்பது
சாதரண தவறல்ல துரோகம்
மீதமுள்ள ஜென்மத்திற்கும்
நீ சேமிக்கும் பாவம்
தூரம் நேரம் பார்க்காமல்
துரத்தி வரும் சாபம்.

- பி.எம்.நாகராஜன்

Wednesday, April 05, 2006

பொன்முட்டை

நீலக் கடலே!
நீ என்ன
பொன் முட்டையிடும்
அன்னமா?
ஒவ்வொரு விடியலிலும்
ஒரு புதிய சூரியனைத்
தருகிறாயே !

-பி.எம்.நாகராஜன்

மீன்

உன் நினைவுகளைத்தவிர
வேறொன்றிலும்
நீந்தத் தெரியாத
மீன் நான்

-பி.எம்.நாகராஜன்

Tuesday, April 04, 2006

உன்னைப்போல

மழைக்கு தெரியாது
நம் காதல் ஈரமானது என்று

கடலுக்கு தெரியாது
நம் காதல் ஆழமானது என்று

வானத்துக்கு தெரியாது
நம் காதல் விரிவானது என்று

நிலவுக்கு தெரியாது
நம் காதல் பெளர்ணமி என்று

காற்றுக்கு தெரியாது
நம் காதல் சுகமானது என்று

ஆனால்
உனக்கு தெரியும்
நம் காதல் உண்மையானது என்று

- ஸ்ரீஜித்

படகு

கடல் என்னும் உலகத்தில்
வாழ்க்கை என்னும் படகில்
நீ
ஒரு துடுப்பு
நான்
மற்றொரு துடுப்பு
இதில்
ஒரு துடுப்பை இழந்தாலும்
படகு என்னும் வாழ்க்கை கவிழ்ந்துவிடும்
இன்பம் அதில் தொலைந்து போகும்.....

நீ பாதி
நான் பாதி
என்று பிரிந்திராமல்
நானும் நீயும்
ஒன்று என்று
சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை

- புன்னகை மன்னன்

இருளில் வெளிச்சம்

என் வாழ்க்கை இருளாகும்
என
உன் வாழ்வில் என்னை நீ சேர்க்காவிடில்
நான்
எப்படி என் வாழ்வில் வெளிச்சம் காண இயலும்
ஏனென்றால்
நீ
என் வாழ்க்கை ஆகும்போது
நான்
உன் வாழ்க்கை ஆவேன் அப்போது
உன்
மற்றும்
என்
வாழ்க்கை இருளில் வெளிச்சம்

- புன்னகை மன்னன்

நினைவுகள்

அன்பே!

நிலவானால் வளரும் தேயும் ஆனால்
உன் நினைவுகள் வளர்ந்து கொண்டே இருக்கும்

அன்பே!

சூரியன் என்றால் மறையும் எழும் ஆனால்
உன் நினைவுகள் எழுந்து கொண்டே இருக்கும்

அன்பே!

மலரானால் மலரும் உதிரும் ஆனால்
உன் நினைவுகள் மலர்ந்து கொண்டே இருக்கும்

அன்பே!

வாழ்க்கை என்றால் வாழ்வோம் இறப்போம் ஆனால்
உன் நினைவுகள் மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கும்

Monday, April 03, 2006

அன்றில்கள்

கோடி கோடி பறவைகளில் - நான்
கோடிட்டு படித்தது அன்றில்களைத்தான்
அவர்களைப் பயிலாதவரை
எவரும் உயிராவதில்லை
அவர்களை மதிக்காதவரை
எவரும் மனிதராவதில்லை
அவர்களை எழுதாதவரை
நானும் முழுமையாவதில்லை

நீவிர் இணையாக
நீந்தி வரும்போது
இடையில் தாமரைகள்
தடையாக நின்று
உங்களை பிரிக்குமானால்
தற்கொலை செய்வீராமே

கல்லணையால் காவிரியைத்
தாலாட்டினான் அந்தச் சோழன்
சொல்லணையால் உங்களைச்
சீராட்டுகிறேன் இந்தத் தோழன்
உண்மையான அன்புக்கு
உதாரணமான பறவைகளே
களங்கமில்லா காதலுக்கு
கற்பான பறவைகளே
சங்க இலக்கியங்கள்
உங்களுக்கு நாங்கள் தந்த
வேடந்தாங்கல்கள்

நீங்கள் இல்லாமல் போனதற்க்கு
தாமரை தான் காரணமென்றால்
தேசிய மலர் பட்டத்தை
திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்

இருகைகளும் கூடுகின்றன
இருகண்களும் மூடுகின்றன
வண்ங்குகிறேன் உங்களை
வணக்கம்.

-பி.எம்.நாகராஜன்
மின்னஞ்சல்