வட்ட நிலா:
குட்டி நிலாவே குட்டி நிலாவே
எங்கே வந்தாய் குட்டி நிலாவே?
குட்டி நிலா:
வட்ட நிலாவே வட்டநிலாவே
வந்தேன் உன்னிடம் வட்ட நிலாவே
கெட்ட உலகம் வாழும் வழியைக்
கேட்க வந்தேன் வட்ட நிலாவே
வட்ட நிலா:
எட்ட இருக்கும் வட்ட நிலா நான்
எனக்கா தெரிய குட்டி நிலாவே?
குட்டி நிலா:
வளர்ச்சி பெற்றாய் குளிர்ச்சி பெற்றாய்
வட்ட நிலாவே வாய் திறவாயோ?
வட்ட நிலா:
தளர்ச்சி பெற்றது தட்டை யுலகம்
சண்டை பிடித்தது குட்டி நிலவே.
குட்டி நிலா:
களைப்பு நீங்க உலகம் ஒருவன்
கைக்குள் வருமோ வட்ட நிலாவே?
வட்ட நிலா:
இருப்பு மிகவும் இருக்கும் ஊரில்
அரிசி உண்டோ குட்டி நிலாவே.
குட்டி நிலா:
ஆயிரங் கோடிச் செலவில் வந்தேன்
அறிவைக் கொடுப்பாய் வட்ட நிலாவே
வட்ட நிலா:
ஆயிரங் கோடியை அரிசிக்காக
அளித்ததுண்டா குட்டி நிலாவே
போய்விடு போய்விடு குட்டி நிலாவே!
போய்விடு -என்றது வட்ட நிலாவே
தீயில் எரிந்தது குட்டி நிலாவே;
தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே
-பாரதிதாசன்
No comments:
Post a Comment