Friday, May 26, 2006

கானல்

வானும் கனல் சொரியும்!- தரை
மண்ணும் கனல் எழுப்பும்!
கானலில் நான் நடந்தேன்- நிழல்
கணும் விருப்பத்தினால்!
ஊனுடல் அன்றிமற்றோர்- நிழல்
உயிருக் கில்லை அங்கே!
ஆன திசைமுழுதும்- தணல்
அள்ளும் பெருவெளியாம்!

ஒட்டும் பொடிதாங்கா- தெடுத்
தூன்றும் அடியும்சுடும்;
விட்டுப் புறங்குதித்தால்- அங்கும்
வேகும்! உளம்துடிக்கும்!
சொட்டுப் புனல்அறியேன்!- ஒன்று
சொல்லவும் யாருமில்லை!
கட்டுடல், செந்தணலில்- கட்டிக்
கந்தக மாய்எரியும்!

முளைத்த கள்ளியினைக்- கனல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய்- இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும்கானல்!- உயிர்
கொன்று தின்னும்கானல்!
களைத்த மேனிகண்டும்- புறங்
கழுத்த றுக்கும்வெளி!

திடுக்கென விழித்தேன்- நல்ல
சீதளப் பூஞ்சோலை!
நெடும் பகற்கனவில்- கண்ட
நெஞ்சுறுத் தும்கானல்
தொடர்ந்த தென்நினைவில்!- குளிர்
சோலையும் ஓடையுமே
சுடவ ரும்கனலோ- என்று
தோன்றிய துண்மையிலே.

-பாரதிதாசன்

No comments: