Tuesday, May 16, 2006

முத்து மாமா

புதுக்கோயில் மதில்மேலே முத்து மாமா- இரண்டு
புறாவந்து பாடுவதேன் முத்து மாமா?
எதுக்காகப் பாடினவோ முத்து மாமா- நாமும்
அதுக்காகப் பாடுவமே முத்து மாமா.
ஒதுக்கிடுமா ஆற்று நீரைக் கடல் வெள்ளம்-என்னை
ஒதிக்கிவைக்க எண்ணலாமா முத்து மாமா?

முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா?
ஓதிய மரத்தின் கீழே முத்து மாமா- கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்து மாமா?
எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா.
குதி குதியாய்க் குதித்துண்டு முத்து மாமா- எனக்குக்
குழந்தையில்லை ஆனாலும் முத்து மாமா
எதிலும் எனக்கதிகாரம் முத்து மாமா- நீதான்
எப்போதுமே என் சொத்து முத்து மாமா!

-பாரதிதாசன்

1 comment:

Muthu said...

நல்லா இருக்கு.