பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி- அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!
ஏழைக்கு வடித்து வைத்த சோறு- பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு
பெருக் கெடுத்த தேனாறு
பெண்ணே உன் எண்ணம் கூறு!
காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா- நீ
கடுகடுப்புக் காட்டவதும் என் மட்டிலா
வேரிலே பழுத்த பலா
வேண்டும் போதும் தடங்கலா?
வீணாகிப் போகலாமா நேரமே- என்னை
விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே
பொறுத்தேன் ஒரு வாரமே
பொறுக்க மாட்டார் யாருமே!
-பாரதிதாசன்
No comments:
Post a Comment