ஆற்றங் கரைதனிலே_ இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றிலுட் கார்ந்திருந்தேன்_ வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர்_ வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார்_சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)
நாட்டின் நிலைபேசிப்_ பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஒர் புறம்
ஒட்டம் பியின்றிடுவார்_ நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச்_ செய்த
குத்துவிளக்சினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே_ மண்ணை
அள்ளுவர், வீழுவர், அம்புலிவேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)
புனலும் நிலாவொனியும்- அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந்- தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்!
தனிஒரு வெள்ளிக்கலம்_ சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்!
போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)
விந்தை உரைத்திடுவேன்_ அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள்_ அது
முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே_ மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்?_ கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன (ஆற்றங்கரையினிலே)
பொருளற்ற பாட்டுக்களை_ அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்;
இருளுக்குள் சித்திரத்தின்_ திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ_ மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு?
கருவுற்ற செந்தமிழ்ச்சொல்- ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங்கரைதனிலே)
சங்கீத விற்பனனாம்_ ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை;
அங்கந்தப் பாட்டினிலே_ சுவை
அத்தனையும் கண்டுவிட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே_ நன்று
நன்றென ஆர்ப்பரித்தார், அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில்_ஓர்
இன்பநறுங்கவி கேட்டது காதினில் (ஆற்றங்கரைதனிலே)
அஞ்சலை உன் ஆசை_ என்னை
அப்புறம் இப்புறம் போகவிடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய்_ நல்ல
கோவைப் பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய்!_ என்ற
வண்ணத் தமிழ்ப்பாதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும் வானத்தையும்- குளிர்
நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும் (ஆற்றங்கரைதனிலே)
ஒன்றெனச் செய்ததுவே!_ நல்
உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்!
நன்று தமிழ் வாளர்க_ தமிழ்
நாட்டினிலே எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ் வளர்க_ கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக!
இன்பம் எனப்படுதல்_ தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! (ஆற்றங்கரைதனிலே)
-பாரதிதாசன்
No comments:
Post a Comment