Saturday, May 13, 2006

சாவை நீக்கு

கண்டவுடன் காதல் கொண்டேன் உன்மேலே- நீ
கண்வைக்க வேணுமடி என்மேலே
அண்டினேன் ஆதரிக்கக் கையோடு- கேள்
அதுதானே தமிழர்கள் பண்பாடு!

கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே- எனைக்
கூட்டிக்கொள் உன் இடுப்பின் ஓரமே
நொண்டியின் கைம்மேல் வந்தா விழும்?- என்
நோய் தீர்க்கும் சேலத்து மாம்பழம்!

அழகில் ஆருமில்லை உன்னைப் போல் -உன்மேல்
அன்பு கொண்டவன் ஆருமில்லை என்னைப்போல்

இழைக்க இழைக்க மணம் கொடுக்கும் சந்தனம்- மனம்
இனிக்க இனிக்கப் பூப்பூக்கும் நந்தவனம்!
பழுக்க பழுக்க சுவை கொடுக்கும் செவ்வாழை
பறிக்கும் போதே மணம் கொடுக்கும் வெண்தாழை
தழுவு முன்னே இன்பந்தரும் பெண்ணாளே- என்
சாவை நீக்க வேண்டுமடி கண்ணாளே!

-பாரதிதாசன்

No comments: