Monday, May 22, 2006

இணையம் உலகை இணைக்கும்

இணையம்;
கனவா, வியப்புதிர்த்திடும் புதிரா?
இல்லை இல்லை, ஆறறிவு விலங்கினத்தின்
அற்புத படைப்பு.

அனல் பறக்கும் கோடையிலும்
குளு குளு அறையில் - ஜில்லென்றிருக்கும்
கால தேவனின் அற்புத குழந்தை.

பன்னீரில் பழரசத்தில் - தவழ்வாரும்
கண்ணீரில் வேர்வையூற்றில் - மிதப்பாரும்
அன்புடன் விரும்பும் குழந்தை.

கிளைகள் யாவும் மாநிலமாய் - அதன்
விழுது யாவும் நாடுகளாய் - வளர்ந்தது
நம் இணையம்.

விளையாட்டா?
பொருளீட்டி பல்வகையில் - செலவிடும்
தவணை முறை வாணிகமா?
கை தேர்ந்த மருத்துவமா?
அல்லது
அது ஓர் சுவை மிக்க இலக்கியமா?
அத்தனையும் வளம் பெறும்
சிறப்பான இணையத்தால்...

பாரதியையும் ஷெல்லியையும் - இணைக்கும்
இன்ப ரதம் அது - தமிழ் வள்ளுவனை
தரணியெல்லாம் உலவ செய்யும்
இந்திய காந்தீயத்தை - இங்கிலாந்தில்
பேசச் செய்யும்.

காதல் எனும் காவியத்தை - கடல் கடந்து
ஏற்படுத்தும் - காதல் சின்னமாய் - தாஜ்மஹாலை
கனடாவிலும் ரசிக்க செய்யும்.

ஏழு கடலுக்கு அப்பாலும் - எளிதாக
பொருள் சேர்க்க செய்யும்.
இமையச்சாரலில் ஒருவன் - எண்ணம்
ஆல்ப்ஸ் சாரலிலும் எதிரொலிக்கும்.

பிற நாட்டு கலைகளை அறிந்திட செய்யும்
புத்தம் புது கலைகள் - நித்தம்
வளர்ந்திடும் எங்கும்.

நிறமும் மொழியும் தடை - உலகில்
கடல் என்பது பிரிக்கும் படையென்ற - பழமைக்கு
கல்லறையமைத்த இணையம்.

உடையில் மாற்றம் - உண்ணும்
உணவில் மாற்றம் - வாழ்க்கை
நடையினால் மாற்றம் - வாழும்
நாட்டினால் மாற்றம் - எனினும்
மானுட அறிவை - மாட்சியுற
செய்யும் இணையம்.

உதவிகள் புரிய உறு துயர் களைய
உயிரியம் எனும் சமநெறி வளர - உதவும்
இணையம் எதிலும் சிறப்பே.

உலகின் ஆதாரம் சூரினனே - எங்கும்
ஒருசேர தெரிவதில்லை - மனிதன்
படைத்த இணையமோ
உலகின் பாலம் என்றுமே!!!

- ஜஹபர் சாதிக்.M

No comments: