Friday, May 12, 2006

அனைத்துமானாய் கண்ணா

கீதையாய் நீ வந்து
பாதையானாய் கண்ணா
விதையாய் நின்று - நீயே
சதையானாய் கண்ணா

சொல்லாய் நீ வந்து
கவியானாய் கண்ணா
எல்லாமாய் நின்று - நீயே
புவியானாய் கண்ணா

பனியாய் நீ வந்து
குளிரானாய் கண்ணா
வெண்ணையாய் நின்று - நீயே
வெளிரானாய் கண்ணா

மலராய் நீ வந்து
மணமானாய் கண்ணா
மனமாய் நின்று - நீயே
குணமானாய் கண்ணா

தென்றலாய் நீ வந்து
தொட்டாய் கண்ணா
தீயாக நின்று - என்னை
சுட்டாய் கண்ணா

தூரலாக நீ வந்து
ஈரமாக்கினாய் கண்ணா
தூரமாக நின்று - என்னை
பாரமாக்கினாய் கண்ணா

இடியாக நீ வந்து
தூற்றினாய் கண்ணா
படியாக நின்று - என்னை
ஏற்றினாய் கண்ணா

இரவாக நீ வந்து
தூங்கவைத்தாய் கண்ணா
கனவாக நின்று - என்னை
ஏங்க வைத்தாய் கண்ணா

கரும்பாக நீ வந்து
இனிமையாக்கினாய் கண்ணா
காதலாக நின்று - என்னை
தனிமையாக்கினாய் கண்ணா

கதிராய் நீ வந்து
ஒளிசேர்த்தாய் கண்ணா
கலங்கரையாய் நின்று - என்னை
வழிசேர்த்தாய் கண்ணா

இசையாக நீ வந்து
மயக்கினாய் கண்ணா
இதயமாக நின்று - என்னை
இயக்கினாய் கண்ணா

நிலவாக நீ வந்து
சிரித்தாய் கண்ணா
நினைவாக நின்று - என்னை
எரித்தாய் கண்ணா

கோபமாக நீ வந்து
கொதித்தாய் கண்ணா
சாபமாக நின்று - என்னை
மிதித்தாய் கண்ணா

சோகமாக நீ வந்து
இடித்தாய் கண்ணா
தாகமாக நின்று - என்னை
குடித்தாய் கண்ணா

அம்மாவாய் நீ வந்து
அன்பானாய் கண்ணா - என்
ஆருயிராய் நீ வந்து - எனக்கு
அனைத்துமானாய் கண்ணா

-பி.எம்.நாகராஜன்

2 comments:

Anonymous said...

nantaka irukkirthu, valthukal

Anonymous said...

alagana kavithai